அவுஸ்திரேலியா முகாமில் இருந்த இலங்கை அகதிகள் உட்பட 36 பேருக்கு கிடைத்த அதிஷ்டம்

Report Print Shalini in புலம்பெயர்

நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலியா தடுப்பு முகாமிலிருந்து இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 36 அகதிகள் அமெரிக்காவிற்கு சென்று அங்கு மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர்.

அதே சமயம், அமெரிக்கா தடைவிதித்துள்ள நாடுகளான ஈரான், சோமாலியா அல்லது இன்னும் பிற முஸ்லிம் நாடுகளை சேர்ந்த எவரும் இதில் சேர்க்கப்படவில்லை.

ஆனால் இந்த நாடுகளை சேர்ந்த அகதிகளே அவுஸ்திரேலியா நிர்வகிக்கும் பப்பு நியூகினியா மற்றும் நவுரு தடுப்பு முகாம்களில் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

அமெரிக்கா தடைசெய்துள்ள நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மீள்குடியமர்த்தும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது, இம்மக்களின் எதிர்காலம் தொடர்பாக அவுஸ்திரேலியா அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது என அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் தெரிவித்திருக்கிறார்.

இன்றைய நிலையில், 130 குழந்தைகள் உட்பட 900 அகதிகள் நவுரு தடுப்பு முகாமில் உள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் கையெழுத்தான அமெரிக்கா- அவுஸ்திரேலியா அகதிகள் ஒப்பந்தம், அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது.

இது ஒரு முறை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.

2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு வழியே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.