யாழ். போதனா வைத்தியசாலையில் 50 சிறுவர்கள் நீரிழிவுக்காக சிகிச்சை

Report Print Thamilin Tholan in நோய்

யாழ். போதனா வைத்தியசாலையில் இயங்கி வரும் நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தில் 50 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் அகம் சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி ம. அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,பாடசாலைச் சிறுமிகள் மிக அதிகமான உடற் பருமனுடன் எமது நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காகத் தினமும் வருகை தருகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் உலக நீரிழிவு தின நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை முற்பகல் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இளம் பெண்களின் உடற் பருமன் அதிகரிக்கும் போது பல விதமான நீண்ட காலப்பிரச்சினைகள் உருவாகும். குறிப்பாகப் பெண்கள் கர்ப்பம் தரிப்பதிலும், மகப்பேறின் போதும் பல பிரச்சினைகள் உருவாகும்.

எனவே, இளம் பெண்கள் அதிலும் பாடசாலையில் கல்வி கற்கின்ற பெண்கள் தொடர்ந்தும் கட்டுப்பாடான உடல் நிறையில் காணப்படுவதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதற்குப் பாடசாலை அதிபர், ஆசிரியர், கல்வியமைச்சு, சுகாதாரத் திணைக்களம் என்பன பொருத்தமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு எந்தவொரு அறிகுறியும் இல்லாமலும் வரலாம். எனவே, குறிப்பிட்ட வயதை அடைந்த அனைவரும் நீரிழிவுப் பரிசோதனை மேற்கொள்வது இன்றியமையாதது.

எமது சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் கருவி எமது வைத்தியசாலையில் இல்லாதது முக்கியமான பிரச்சினையாகவிருந்து வந்தது.

இந்தப் பிரச்சினையை நாம் எடுத்துச் சொன்ன போது யாழ். நீரிழிவுக் கழக உறுப்பினர்களும், மற்றைய உறுப்பினர்களும் அந்தக்கருவிகளை இலவசமாக எங்களுக்குப் பெற்றுத் தருவதற்கு உதவி செய்தார்கள்.

நாங்கள் பாடசாலை மற்றும் சமூதாய மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

மாகாண சுகாதார அமைச்சு மற்றும் யாழ்.பல்கலைக்கழகச் சமூதாய மருத்துவத் துறை, யாழ். நீரிழிவுக் கழகம் போன்றன எங்களுக்குப் பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளுக்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர்குறிப்பிட்டுள்ளார்.