மட்டக்களப்பில் 31 பேருக்கு எயிட்ஸ்!

Report Print Rusath in நோய்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொதுச்சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளிலும் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு, முழு முயற்சியுடன் இடம்பெற்று வருவது தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 31 பேர் எயிட்ஸ் நோய்க்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் 26 பேர் கொழும்பிலும், 2 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 5 பேர் மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல் பரிமாற்ற நோய், மற்றும் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு செயற்திட்டங்களின் விழிப்புணர்வு முழுமூச்சாக இடம்பெற்று வருகின்றது.

இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் எயிட்ஸ் தொற்று அடுத்தவருக்கு பரப்பப்படாமல் இருப்பதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் மக்களை ஊக்குவிப்பதே எமது விழிப்பூட்டலின் நோக்கம்.

மட்டக்களப்பில் வருடாந்தம் சாதாரணமாகவே 12000 கர்ப்பிணித் தாய்மாரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 2400 பேரும், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வருவோர்களில் சுமார் 3600 பேரும், கிராமங்களுக்குச் சென்று சுமார் 5000 - 6000 பேரும் இரத்தப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் மற்றவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும், அதேவேளை, எச்.ஐ.வி தொற்றில்லாதவருக்கு விழிப்புணர்வையூட்டி அவரைத் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

எயிட்ஸ் ஆட்கொல்லி நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதில் மருத்துவ உலகம் முன்னேறியிருக்கின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.