தென்னிலங்கை மக்கள் எதிர்நோக்கும் ஆபத்து! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Report Print Samy in நோய்

நாட்டின் தென்பகுதியில் தலைதூக்கிய இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், ஆபத்து இன்னுமே முற்றாக நீங்கி விடவில்லை.

தெற்கில் இதுவரை 14 பேரைப் பலி கொண்டு விட்டது இன்புளுவன்சா வைரஸ். மரணமடைந்தோரில் அநேகர் இளவயது சிறார்களென்பது வேதனை தருகின்ற விடயம்.

தமது பிள்ளைகளின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பெற்றோர் கதறியழுகின்ற பரிதாபக் காட்சியை தொலைக்காட்சிகளில் காண முடிந்தது.

பிள்ளைகளைப் பறிகொடுத்து நிற்போர் தங்களது வேதனைக்கு மத்தியில் வைத்தியசாலையையும், மருத்துவர்களையும் திட்டித் தீர்த்ததையும் பார்க்க முடிந்தது.

பிள்ளைகளின் இழப்பு ஏற்படுத்தியிருக்கும் வேதனையினால் பெற்றோர் அவ்வாறு குமுறுவது புரிகின்றது.ஆனாலும் இதுபோன்ற கொடிய வைரஸ் தாக்கங்களின் போது, மருத்துவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்ற சில வைரஸ் நோய்களைக் குணப்படுத்த மருத்துவ சிசிச்சைகள் கைகொடுப்பதில்லை.

அதுவும் நோயின் ஆரம்பக் கட்டத்தில் சிகிச்சையளிப்பதற்கு தவறுகின்ற போது, நோய் முற்றிய நிலையில் மருத்துவர்களால் எதுவுமே செய்ய முடிவதில்லை.

நாட்டின் தெற்கில் பரவிய இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சலும் இவ்வாறான ஆபத்துமிக்க நோய்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் அயல் மாநிலமான கேரளாவில் சமீபத்தில் மக்கள் பலரைப் பலி கொண்டு விட்ட 'நிபா' வைரஸ் காய்ச்சலையும், இவ்வாறான கொடிய நோய்களின் பட்டியலில் அடக்க முடியும்.

கேரளாவில் நிபா வைரஸ் பரவியதற்குக் காரணம் வௌவால்கள் என்பதே மருத்துவ ஆய்வுகளின் முடிவாக இருக்கின்றது.

இலங்கையின் தென்பகுதியில் பதினான்கு பேரைப் பலி கொண்ட இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சல், கேரளாவைப் பயமுறுத்துகின்ற நிபா வைரஸுடன் ஒப்பிடுகையில் வீரியம் குறைவானது தான். ஆனாலும் இதனை அலட்சியப்படுத்தி விட முடியாது.

நோய்த் தொற்றுக்கு உள்ளாவோரின் உடல் பலவீனமாகக் காணப்படுகின்ற போது அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியும் குறைகின்றது.

அவ்வேளையில் வைரஸ் கிருமிகள் வெற்றியடைந்து விடுவதால் நோயாளியின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகின்றது. எனவே தான் நோய்த் தொற்றுக்கு உள்ளாவோரில் சிலரின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகின்றது.

வைரஸ் நோய்கள் தொடர்பாக நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய இரு விடயங்களை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்.

முதலாவது, வைரஸ் தொற்றுக்கு இலக்காகாமல் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம்.இரண்டாவது, நோய் அறிகுறிகள் தென்பட்டதும் தாமதிக்காமல் மருத்துவ உதவிகளை நாடுவது முக்கியம்.

இவ்விரண்டு விடயங்களையும் அலட்சியம் செய்கின்ற போதுதான் நோயிலிருந்து பாதுகாப்புப் பெற முடியாமல் போகின்றது. சிலர் உயிராபத்தையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது.

மருத்துவ உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை வைரஸ்கள் ஆகும். மக்களுக்கு மிகச் சாதாரணமாக ஏற்படுகின்ற தடிமன் தொடக்கம் உயிரைப் பறிக்கின்ற எய்ட்ஸ் வரை ஏராளமான வியாதிகளுக்கு வைரஸ்களே காரணமாக அமைகின்றன.

ஆனால் அனைத்து வித வைரஸ்களும் ஆபத்தானவையல்ல. எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியினால் இயல்பாகவே குணமாகின்ற நோய்களுக்குரிய வைரஸ்களால் எமக்கு ஆபத்து இல்லை.

வீரியம் கொண்ட வைரஸ்களே எமக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே கொடிய வைரஸ்கள விடயத்தில் மனிதகுலம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

டெங்கு, நிபா, எச்.ஐ.வி. போன்ற கொடிய வைரஸ்களை அழிக்கக் கூடிய நேரடியான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமலிருப்பது மருத்துவ உலகம் சந்தித்திருக்கும் தோல்வியாகும்.

சில வைரஸ் வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளன. ஆனால் அனைத்துவித வைரஸ் நோய்களுக்கும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

நோய் தொற்றாமல் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதனாலும், மருத்துவ உதவியை தாமதிக்காமல் நாடுவதனாலுமே நோயிலிருந்து நாம் பாதுகாப்புப் பெற முடியும்.

எனவே வைரஸ் தொற்றுகள் விடயத்தில் மக்களுக்கு எப்போதுமே முன்னெச்சரிக்கை தேவை. இதனை அலட்சியப்படுத்துவது ஆபத்துக்கே வழிவகுக்கும்.