நாளொன்றுக்கு 120 முதல் 150 வரையான மரணங்கள்! காரணம் இதுதான்

Report Print Kamel Kamel in நோய்

இதய நோயினால் நாளொன்றுக்கு 120 - 150 பேர் வரையில் உயிரிழப்பதாக காலி கராபிட்டிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் பொறுப்பாளர் நாமல் கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் இடம்பெறும் இயற்கை மரணங்களில் பெரும்பாலானவை இதய நோய் காரணமாக ஏற்படுகின்றன.

தொற்றா நோய்களினால் இலங்கையில் நாள் ஒன்றுக்கு 250 பேர் உயிரிழக்கின்றனர். இதில் அதிகளவான மரணங்கள் இதய நோய்களினால் ஏற்படுகின்றது.

இலங்கையில் மட்டுமன்றி உலகின் எந்தவொரு நாட்டிலும் இதய நோய்களினால் அதிகளவான மரணங்கள் ஏற்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு இதய நோய் தொடர்பில் 50 முதல் 60 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

எனினும், இலங்கையில் நாள் ஒன்றுக்கு அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 12 சத்திரசிகிச்சைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இதய நோய் சத்திர சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல் நீண்டு செல்கின்றது.

அதிகளவு எண்ணெய் கொண்ட உணவு உட்கொள்ளல், போதியளவு உடற் பயிற்சி மேற்கொள்ளாமை, பரம்பரை காரணிகள், நீரிழிவு நிலைமை, மன அழுத்தம், இரத்த அழுத்தம் உள்ளிட்ட காரணிகளினால் இதய நோய் அதிகளவில் ஏற்படுகின்றது என நாமல் கமகே தெரிவித்துள்ளார்.