கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 ஆயிரம் பேர் பலி? - சீன தொழிலதிபர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

Report Print Tamilini in நோய்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக சீனாவில் இருந்து தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் குயோ வெங்குயி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. இந்த வைரசால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் கடந்த 2002-03-ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவிய சார்ஸ் நோயால் ஏற்பட்ட உயிர் இழப்புகளைவிட தற்போது அதிகமாகி உள்ளது. அங்கு இதுவரை 908 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்தநிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து இருப்பதாக சீனாவில் இருந்து தப்பியோடி அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் குயோ வெங்குயி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘உகானில் உள்ள 49 சுடுகாடுகளும் 24 மணி நேரமும் இயங்குகின்றன. அங்கு ஒரு நாளைக்கு 1,200-க்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்படுகிறது.

கடந்த 17 நாட்களுக்கும் மேலாக வுகான் நகர சுடுகாடுகளில் உள்ள ஊழியர்கள் தொடர்ந்து பணியில் உள்ளனர். வுகான் தவிர சீனாவின் மற்ற நகரங்களில் உள்ள சுடுகாடுகளிலும் இந்த செயல் தொடர்கிறது. சீனாவில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு இந்த தகவல்களை நான் கேட்டேன். அங்கு 15 லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வைரசால் உயிர் இழந்து எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும்’’ என்றார்.

சீனாவில் இருந்து தப்பி ஓடி அமெரிக்காவில் வசித்துவரும் குயோ வெங்குயி, கடந்த 2017-ம் ஆண்டு சீன அரசின் உயர் அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி அது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டார்.

இவர் மீது சீன அரசு ஊழல், கடத்தல், கற்பழிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. மேலும் இவர் அமெரிக்காவின் ஒற்றர் என்றும் சீன அரசு கூறி வருகிறது.

இந்தநிலையில், கொரோனா பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து இருப்பதாக இவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.