நீரிழிவு நோயாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வாறு இருக்கும்..?

Report Print Tamilini in நோய்

நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு வருமா? என்பது குறித்து நீரிழிவு நோய்த்துறையின் சிறப்பு மருத்துஅவ்ர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கிவிடும் என்று பரவலான தகவல்கள் உலா வருகின்றன.

இதுகுறித்து சென்னை மியாட் மருத்துவமனை நீரிழிவு நோய்த்துறையின் சிறப்பு மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

கேள்வி:- நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால் ஆபத்து அதிகம். ஆகவே அதனை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். 90 சதவீதம் இந்த கொரோனா வைரஸ் தொண்டையை தான் பாதிக்கிறது. அதை மட்டும் பாதித்தால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் அது உள்ளே சென்று நுரையீரலை பாதித்தால்தான் உயிரை பாதிக்கும்.

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால், சாதாரண மனிதனுக்கு எப்படி பாதிப்பு இருக்குமோ அப்படிதான் இருக்கும். அதுவே சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால், கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தால் போகாது. அவர்கள் எடுக்கும் மருந்துகளையும் உடல் ஏற்றுக்கொள்ளாது.

கேள்வி:- இந்த காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

பதில்:- கடந்த 3 மாதங்களின் சர்க்கரையின் சராசரி (எச்.பி.ஏ.ஒன்.சி.) அளவை சரிபார்த்து கொள்ள வேண்டும். அந்த சராசரி அளவு 7 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதை சரியாக பார்க்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

யாராவது இருமிக்கொண்டு இருந்தால் அவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். இதுதவிர சரியான நேரத்துக்கு உணவு சாப்பிட்டு, மருந்துகளை சரியாக பின்பற்றினால் எந்த பிரச்சினையும் வராது. அதிலும் குறிப்பாக சர்க்கரை அளவு கூடுவதையும், குறைவதையும் நன்றாக கண்காணித்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- முகக்கவசம் அணிவது அவசியமா?

பதில்:- முகக்கவசம் அணிவது அவசியம் இல்லை. அதை வாங்குவதற்காக பலர் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பவர் அருகில் இருந்தால், அந்த நேரத்தில் பாதுகாப்புக்காக அணிவது அவசியம்.

கேள்வி:- 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கிவிடும் என்று கூறுகிறார்களே?

பதில்:- 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு உள்ளது போன்ற அதே ஆபத்து தான். அவர்களும் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோய், காசநோய், புற்றுநோய், உடல் உறுப்பு தானம் பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரே பிரச்சினை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது. எனவே அவர்கள் பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டொக்டர்களின் அறிவுறுத்தலின்படி செய்தால் போதும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

- Maalai Malar