கொரோனா தொற்று சந்தேகம் - 4 வயது சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

Report Print Tamilini in நோய்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.தாவடி பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த 4 வயதான சிறுமி இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் இரத்த மாதிரிகளை இன்று மாலையே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து அறிவிக்க முடியும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து 6 மாத குழந்தை ஒன்றுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டது.

எனினும் இரத்த மாதிரியை பரிசோதனை செய்த நிலையில் தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த குழந்தை வீட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியர் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

மேலும் தாவடிப்பகுதியில் இருந்து இன்று அனுமதிக்கபப்ட்டிருக்கும் 4வயது குழந்தைக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது என கேட்டபோது, காய்ச்சல் மற்றும் தடிமனை அடுத்தே சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

சிறுமி தாவடிப்பகுதி என்பதனாலும் சுவிஸ் மத போதகரால் தொற்றுக்குள்ளான கொன்ராக்டர் மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் உறவு என்பதனாலும் அவரை சோதனைக்குட்படுத்தப்படல் என்பது அவசியமாகும். நாளைய தினம் தான் சிறுமியின் இரத்த மாதிரி முடிவு வெளிவரும் எனவும் தெரிவித்திருந்தார்.