மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்த நடவடிக்கை

Report Print Kamel Kamel in பொருளாதாரம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு விசாரணை குறித்த விரிவான அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.

மிகவும் முக்கியமான தகவல்களை உள்ளடக்கி கணக்காய்வாளர் நாயகத்தினால் தமக்கு வழங்கிய விரிவான அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்திய வங்கியின் ஆளுனர் இணங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை கோப் குழுவிற்கும், சபாநாயகருக்கும் கணக்காய்வாளர் நாயகம் வழங்கியிருந்தார்.

இந்த அறிக்கையின் இரகசிய தன்மையை பேணிப் பாதுகாக்க இதுவரை காலமும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனினும் இந்த அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து அறிக்கையை வெளியிடுவது குறித்து புதிய மத்திய வங்கியின் ஆளுனரிடம் சபாநாயகர் கருத்து கோரியுள்ளார்.

அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கத் தடையில்லை என நேற்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருந்தார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த விரிவான அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

1251 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை கணக்காய்வாளர் நாயகம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் பதவி வகித்த காலத்தில் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் பாரிய மோசடி ஏற்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியினரும், ஏனைய சில தரப்புக்களும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments