ஊடக நிறுவனம் ஒன்றிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் CSN

Report Print Kumutha Kumutha in பொருளாதாரம்

சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட விஜய நியுஸ் பேப்பர் நிறுவனத்திடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.

தனது சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க ஊடாகவே இவர் குறித்த நட்டஈட்டு பணத்தை கோரியுள்ளார்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குறித்த நிறுவனத்தின் சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்தே, ரொஹான் இந்த நட்டஈட்டு தொகையை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிகை செய்தியில், 'சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தின் 157.5 மில்லியன் ரூபா நிதி அரசுடமையாக்கப்பட்டுள்ளது' என்ற தலைப்பின் கீழ் ரொஹான் வெலிவிட்டவின் வங்கி கணக்குகளில் குறித்த நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த நிதியானது அவருடையது அல்லவென்றும், இது யோசித்த ராஜபக்ஸவின் நிதி என்றும் பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது ரொஹான் கூறியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த வருடம் ஆகஸ்ட் 10ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கடுவெல நீதவான் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பீ அறிக்கையில் ரொஹான் வெலிவிட்டவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே பொய்யான செய்தியை வெளியிட்டமைக்கு எதிராகவே குறித்த நட்டஈடு கோரி பதிவுத் தபால் மூலம் அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டு தொகையானது 14 நாட்களுக்குள் தமக்கு கிடைக்காத பட்சத்தில் விஜய நியுஸ்பேப்பர் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ரொஹான் வெலிவிட்டவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments