5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி! 500 பொருட்களுக்கு விலை குறைப்பு: ரிஷாட்

Report Print Shalini in பொருளாதாரம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு 5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை விளக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி வந்து சேர்ந்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் 500 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை குறைத்து லங்கா சதொசவில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை விலைக்கழிவு அமுலில் இருக்கும்.

அத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும், ரயில்வே நிலையங்களிலும், அரச நிறுவனங்களிலும் முடியுமான வரை சதொச விறபனைக் கிளைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறோம்.

இறக்குமதி செய்யப்படும் அரிசியையும், உள்நாட்டு அரிசியையும் கலந்து விற்பனை செய்யும் மோசடிகள் இடம்பெறுவதாகவும் எனவே, அவற்றைத் தவிர்க்கும் வகையில் அரிசிக்கான ஆகக் கூடிய உச்ச சில்லறை விலையை நீக்குமாறும் மொத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்தே, உச்ச சில்லறை விலை நீக்கப்பட்டது.

சதொசவில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 65ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தெங்கு அபிவிருத்திச் சபை எமக்கு வழங்கும் அத்தனை தேங்காய்களையும் ஒரு சதமேனும் இலாபமின்றி நாம் விற்பனை செய்து வருகின்றோம்.

லங்கா சதொச நகரங்களை மையாமாக வைத்தே தற்போது தேங்காய்களை விற்பனை செய்து வருகின்றது. எனினும் தேங்காய் அதிகமான அளவில் எமக்குக் கிடைக்கப் பெற்றால் நாடு பூராகவும் இதனை விஸ்தரிக்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், லங்கா சதொச கிளையில் வெள்ளை நாடு 65 ரூபா, வெள்ளைச் சம்பா 90 ரூபா, நாடு 74 ரூபா, வெள்ளைச் சீனி 107 ரூபா, சிவப்பு பருப்பு 152 ரூபா, நெத்தலி 99 ரூபா, பெரிய வெங்காயம் 134 ரூபா, உருளைக்கிழங்கு 125ரூபா, டின்மீன் (425 கிரேம்) 129ரூபா ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Latest Offers