அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளிடமிருந்து கடனாகப் பெற்ற மூன்று லட்சம் கோடி ரூபாவைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாகத் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
எமது நாடு எந்த அளவுக்குக் கடன் சுமையில் உள்ளது என்பதை பிரதமரின் இந்தக் கூற்று தெளிவாகப் புலப்படுத்துகிறது.
இலங்கை போன்றதொரு அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டுக்கு மூன்று லட்சம் கோடி ரூபா கடன் என்பது மிகப்பெரிய தொகையாகும். நாட்டின் வளங்கள் அனைத்தையும் சேர்த்தால் கூட இந்தத்தொகை தேறமாட்டாது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் தொகையான பணம் வெளிநாடுகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. இதற்கு அதிக வட்டியும் செலுத்த வேண்டிய நிலையும் அரசுக்கு உண்டு.
கடன் வழங்கிய நாடுகளைப் பொறுத்த வரையில் சீனா முதலிடத்தில் உள்ளது. இலங்கையை அபிவிருத்தி செய்வதாகக் கூறிக் கொண்டு சீன அரசு பெருந்தொகையான கடனை இலங்கைக்கு அள்ளி அள்ளி வழங்கியது. இதற்கு அதிக வட்டியையும் விதித்திருந்தது.
தற்போதும் சீனா இலங்கைக்கு மேலும் கடனை வழங்கிக் கடனாளியாக்கி வருகின்றது. இதன் காரணமாகவே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்குத் தாரை வார்க்க வேண்டியதாயிற்று.
முன்னர் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச தமது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் துறைமுகம், பன்னாட்டு வானூர்தி நிலையம், விளையாட்டரங்கம் ஆகியவற்றைப் பெரும் பொருட் செலவில் அமைத்தார்.
இவற்றைச் சீனாவிடமிருந்து பெற்ற கடன்கள் மூலமாகவே அமைக்க முடிந்தது. கடன் தொகைக்கான முதலும், வட்டியும் பெருந் தொகையாக உருவெடுத்து தற்போதைய அரசைப் பெரும் இக்கட்டுக்குள் தள்ளி விட்டுள்ளது.
துறைமுகமும், வானூர்தி நிலையமும் வர்த்தக ரீதியில் பார்க்கும் போது பயனற்றவைகளாகவே காணப்படுகின்றன. வௌ்ளையானைகளாக உருவெடுத்து நிற்கும் இவற்றைப் பராமரிப்பதே இயலாத காரியமாகப் போய்விட்டது.
இதனால் அம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தைச் சீனாவுக்கு வழங்க வேண்டியதாயிற்று. வானூர்தி நிலையத்தின் மீது இந்தியா கண்வைத்துள்ளது. அமபாந்தோட்டைத் துறைமுகம் சீனாவின் வசம் சென்று விட்டதில் இந்தியா கடுமையான அதிருப்தியில் உள்ளது.
தெற்காசியாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்துள்ளதால், அங்கு அமைந்துள்ள துறைமுகத்தை சீனா பயன்படுத்துவது தனது பாதுகாப்புக்குப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடுமென இந்தியா கருதுவதில் தவறொன்றுமில்லை.
வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதிலும் சிக்கல் நிலையொன்று தோன்றியுள்ளது. தெற்கில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், அரசு இந்த விடயத்தை ஆறப் போட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் இந்தத் தாமதிப்பை இந்தியா ஏற்றுக்கொள்வது சந்தேகமே.
நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்குப் போரையே காரணம் கூறிக் கொண்டிருப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன.
இனிமேல் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகளே ஆட்சியாளர்களிடம் இருத்தல் வேண்டும். நாடு தற்போது நாட்டு மக்களது அத்தியாவசியத் தேவைக்கான சகல பொருள்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
இதற்கு பெருந்தொகையான அந்நியச் செலாவணி தேவைப்படுகின்றது. இதனை ஈடுசெய்ய ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண் டும். ஆனால் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் நாட்டின் ஏற்றுமதியில் உரிய இலக்கை எட்ட முடியவில்லை.
உதாரணமாக தேயிலை, இறப்பர் ஆகிய முக்கிய ஏற்றுமதிப் பொருள் களின் உற்பத்தி பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஒரு காலத்தில் நெற்களஞ்சியமாக விளங்கிய இந்த நாடு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
எரிபொருள்களின் இறக்குமதிக்கென ஆண்டு தோறும் அதிகளவு பணம் செலவிடப்படுகின்றது. மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாகவும், விரைவில் அதை வர்த்தக ரீதியில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அது சாத்தியமாகவில்லை.
கடல் வளமும் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை. மீன்களைப் பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலையே இன்னமும் நீடிக்கிறது.
தற்போது தேங்காய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தேங்காய்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது.
உள்ளூரில் உற்பத்தி செய்யக் கூடிய உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியனவும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுமென எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
உற்பத்திகள் பெருகும் போது தான் நாட்டின் தேசிய வருமானம் அதிகரிக்கும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அளவுகோலாக விளங்குவது தேசிய வருமானமே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நாடு தற்போது பயணிக்கின்ற திசையைப் பார்க்கும் போது பெற்ற கடன்களைச் செலுத்துவதற்கு மீண்டும் கடன்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. இது நாட்டை மீளமுடியாத படுகுழிக்குள் தள்ளிவிடும்.
சீனா தனது நலன்களைப் பேணுவதற்காக எவருடனும் உறவுகளைப் பேனுவதற்குத் தயாராக உள்ளது. தனக்கு நன்மை கிடைக்குமானால் தனது பரம எதிரியான இந்தியாவுடன்கூட கை கோர்ப்பதற்கும் அது தயங்காது.
இந்தியாவும் அதே நிலையில்தான் உள்ளது. ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினையில் அந்த நாடு ஒதுங்கி நிற்பதற்கு அதன் பிராந்திய நலன் குறித்த சுயநலமே பிரதான காரணமாகும்.
அந்த வகையில் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் தரப்பை எதிர்ப்பதற்கு இந் தியா ஒருபோதும் விரும்பாது.
ஒட்டு மொத்தமாக நோக்கும்போது எமது நாடு பொருளாதாரத்தில் மீட்சி பெறுவதற்கான ஒளி வெகு தூரத்தில் கூடத் தெரிவதாகக் கூறிக் கொள்ள முடியவில்லை.