ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடைய செய்தால் மத்திய வங்கி தலையிடும்!

Report Print Samy in பொருளாதாரம்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடைய செய்ய யாராவது முயற்சித்தால் அதற்கு அதற்கு எதிராக மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

டொலர் விற்பனை விலையை தீர்மானிக்கும் விடயத்தில் தலையிடுவதில்லையென கடந்த வருடம் மார்ச் முதல் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

மிதக்கும் நாணயமாற்று வீதக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதற்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமாகும் எனவும் அவர் கூறினார்.

2017ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையை நேற்று நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்த பின்னர் மத்திய வங்கியில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் நாணயமாற்று இருப்பு 9.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. சந்தையிலிருந்து இந்த வருடம் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி கொண்டு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியில் கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.

இருந்தபோதும் செயற்கையான தோற்றப்பாட்டை ஏற்படுத்த நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய யாராவது முயற்சித்தால் அதனைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி தலையிடும் என்றார்.

அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட கடன் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் இரண்டாவது கொடுப்பனவு என்பவை கிடைக்கும்போது டொலரின் வருகை அதிகரித்து நாணயப் பெறுமதி உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் விளக்கமளித்த மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் விக்ரமசிங்க, சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாணயப் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுவது வழமையானது.

புத்தாண்டுக்கு முன்னர் இறக்குமதிகளுக்காவும், ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும் பெருமளவு டொலர் செலவிடப்பட்டிருக்கும். புத்தாண்டின் பின்னர் டொலருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டமையால் மிதக்கும் நாணயமாற்று சந்தைக்கு அமைய நாணயப் பெறுமதி அதிகரித்துள்ளது. இதுவே இந்த நிலைமைக்குக் காரணமாகும் என்றார்.