பாரிய சவால்களை வெற்றி கொள்ளும் வழி

Report Print Samy in பொருளாதாரம்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி அண்மையில் தெரிவித்திருக்கும் கூற்றுப்படி நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. அதாவது நாடு கடந்த காலத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்திருப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக காணப்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். வெளிநாட்டு முதலீடு கூட அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடத்தில் 1.7 பில்லியன் டொலரை வெளிநாட்டு முதலீடாகப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக ஆளுநரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றிச் செல்வதற்காக அரசாங்கம் துரித செயல் திட்டமொன்றை வகுத்துச் செயற்படத் தொடங்கியுள்ளது.

செயல்திட்டத்தை வகுப்பது இலகுவானது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும்போது தான் சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அத்தகைய சவால்களை வெற்றிகொள்வதில் அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை அண்மைக்கால நடவடிக்கைகள் உணர்த்தி நிற்பதை அவதானிக்க முடிகிறது.

சில செயற்பாடுகள் நீண்டகாலத் திட்டங்களையும் மற்றும் சில குறுகியகால செயற்பாடுகளாவும் அமைத்து காணப்படுகின்றது. இவற்றை சமகாலத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற அரசின் உறுதியான நிலைப்பாட்டுக்கு மத்திய வங்கி உறுதுணையாக நிற்பதை ஆளுநரின் அறிக்கையின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

இரண்டு மூன்று மாதங்களாக எதிர்பார்த்திருந்த அமைச்சரவை மாற்றம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. நல்லாட்சி அரசின் மூன்றாம் கட்ட அமைச்சரவை மாற்றம் இது. இதனை விஞ்ஞானபூர்வ அமைச்சரவை எனக் கூறுவது பொருத்தமற்றது. அறிவுபூர்வமான அமைச்சரவை மாற்றம் என்பதே சரியானது.நல்லாட்சி அரசுக்கான பயணம் இன்னும் 18 மாதங்களைக் கொண்டதாகும்.

இந்தப் பதினெட்டு மாதங்களில் இந்த அரசு முன்னெடுக்கவிருக்கும் திட்டங்களைத் தான் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்தச் செயற்பாடுகள் மக்களது நம்பிக்கையை வென்றெடுப்பதிலேயே அரசின் எதிர்காலம் தங்யிருக்கின்றது என்பதை மறுத்துரைக்க முடியாது.

அரசாங்கத்தின் இந்த 18 மாத காலப் பயணமானது பொருளாதாரக் கட்டமைப்பு உறுதிமிக்கதாக அமையும் பட்சத்தில் தான் பயணப்பாதை வலுவானதாக அமைய முடியும். அபிவிருத்தியும், பொருளாதார முன்னேற்றமுமே இங்கு பிரதானமாக நோக்கப்படவேண்டியுள்ளது.

அரசின் செயற்திட்டங்கள் உறுதிமிக்கதாக அமையவேண்டியது முக்கியமானதாகும். ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டது போன்று திட்டங்களை வகுப்பது சுலபமானது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காரிய சூரத்தனமில்லாத நிலை ஏற்படுமானால் அவை தோல்வி கண்ட திட்டமாக முடங்கிப்போய்விடலாம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அரசு திட்டமிட்டுள்ள பாரிய செயற்திட்டங்களில் பலவும் இன்னமும் ஆரம்பக்கட்டத்திலேயே காணப்படுகின்றன. அவை செயற்படத் தொடங்கினால் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட முடியும். அதற்குரிய பொருளாதாரக் கட்டமைப்பு இங்கு முக்கியமானதாகும்.

அதற்கான அணுகுமுறையை மத்திய வங்கி கையாள வேண்டியுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் இதனையே கடந்த வாரத்தில் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தியுள்ளார். ஆரோக்கியமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இந்த எதிர்பார்ப்பு கைகூடுமானால் அரசு உரிய இலக்கை எட்ட முடியும் என எதிர்பார்க்கலாம்.நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை சீராக கையாளும் பொறுப்பு அரசின் கைகளிலேயே தங்கியுள்ளது.

அமைச்சரவைக்கு கைகொடுத்துதவக் கூடிய பொருளாதார ஆலோசனைக் குழு மற்றும் பொருளாதாரக் குழு அதனதன் பங்களிப்பை வெளிப்படையாக முன்னெடுக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளன.

அதே சமயம் பொருளாதாரத்தை சரியாக முன்னெடுத்துச் செல்லும் விடயத்தில் அரசுக்கு எதிர்க்கட்சியும் பக்கபலமாக இருக்கவேண்டும். கட்சி அரசியலுக்கப்பால் நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்க்கட்சிக்கும் வகிபாகமொன்றுள்ளதை மறுத்துரைக்க முடியாது.

செயற்கைப் பலன்களை நோக்குகின்றபோது கடந்த காலத்தில் நாடு பின்னடைவைக் கண்டுள்ளதை மறுக்கவியலாது முக்கியமாக உலகச் சந்தையுடனான போட்டித்தன்மையில் பெரும்பின்னடைவை நாடு எதிர்கொண்டது. உலகப் பொருளாதார அமைப்பு இதனை அடிக்கடி சுட்டிக்காட்டி அச்சுறுத்தியதை காணக்கூடியதாக உள்ளது.

இந்தச் சவாலை எதிர்கொண்டு புதிய பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கு 18 மாதங்கள் என்ற எல்லை மிகப் பெரிய சவாலாகும். ஆனாலும் இதனை வெற்றிகொள்வது என்ற அரசின் உறுதியான நிலைப்பாட்டை வரவேற்க வேண்டியுள்ளது.

பொருளாதாரக் கட்டமைப்பு விடயத்தில் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் மட்டமல்ல. மேற்குலக நாடுகளும், ஏன் வளர்ச்சிகண்ட நாடுகளும் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நாடுகளின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியின் மூலம இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி வர்த்தகம் இரண்டிலும் நாடு கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். அதன் மூலமே எமது பொருளாதாரக் கட்டமைப்பை பலப்படுத்திக்கொள்ள முடியும்.இந்த வருட இறுதிக்குள் கணிசமான செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

அப்போது தான் எஞ்சியுள்ள 12 மாதங்களில் முழுமையாக இல்லாவிட்டாலும் இலக்கு நோக்கிய பயணத்தில் எல்லைக் கோட்டையாவது அண்மிக்க கூடியதாக இருக்கும். விமர்சனங்கள், தடைகளைச் சந்திக்க வேண்டியேற்படலாம்.

அவற்றை சமாளித்து உறுதியாகச் செயற்படுவதில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிட முடியாது.அரசாங்கம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள், நெருக்கடிகளை நன்குணர்ந்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திட்டங்களை முன்னெடுப்பதில் புதுயுகத்திகளை கையாண்டு வியூகங்களை மாற்றியமைத்துச் செயற்படத் தீர்மானித்திருக்கிறார்.

புதிய வியூகங்கள் எவ்வாறானதாக அமையப்போகின்றன என்பதை அடுத்துவரும் சில தினங்களுக்கிடையில் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை இதனடிப்படையிலேயே அமையப்பெற்றிருப்பதாக அவதானிக்க முடிகிறது. இது சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய வழியாகவே நோக்க வேண்டியுள்ளது.