படுபாதாளத்திற்குள் சென்றுள்ள பொருளாதாரம் - மங்கள சமரவீர

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

மைத்திரிபால சிறிசேன - மகிந்த ராஜபக்ச அரசியல் சதித்திட்டம் காரணமாக நாட்டில் பொருளாதாரம் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நபரின் தாழ்வு மனப்பான்மையான அக்கிரமம் மற்றும் பொறுப்பற்ற செயல் காரணமாக முழு நாடும் மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட இடமளிக்க முடியாது.

நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் சட்ட ரீதியான பிரதமர், அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் இல்லாத நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது எனக்கு தெரியாது.

அடுத்த ஜனவரி மாதம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என்ற பெருந்தொகை கடனை இலங்கை திருப்பி செலுத்த வேண்டும். அந்த கடனை செலுத்துவது தாமதிக்கப்பட்டால், நாடு சர்வதேச ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் படுபாதாளத்திற்குள் விழும்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் சட்டரீதியான அரசாங்கம் அல்ல என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதற்கு அமைய தற்போது நாட்டில் இருப்பது சர்வதேசம் அங்கீகரித்த அரசாங்கம் அல்ல.

நாடாளுமன்றத்தில் சட்டரீதியான நிதியமைச்சர் இல்லை. நாட்டை முன்னோக்கி இட்டு செல்ல, நிதிகளை ஒதுக்க முடியாத நிலைமை.

சூழ்ச்சி அரசாங்கத்திற்கு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்யும் அதிகாரம் கிடையாது. பெரும்பான்மை இல்லாத கட்சி.

இதனால், முழு நாட்டின் செயற்பாடுகளும் ஸ்தம்பிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.