பொருளாதார சரிவை தடுக்க வட்டியை குறைத்தது மத்திய வங்கி!

Report Print Murali Murali in பொருளாதாரம்

இலங்கை மத்திய வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டியை 0.50 சதவீதம் குறைத்து 8.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

இது இலங்கையின் பொருளாதார சரிவைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த மாதம் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. பயண முன்பதிவுகளும் இரத்து செய்யப்படுவதால் இந்தாண்டு பாரிய இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறைந்து விட்ட நிலையில் இந்தாண்டு மேலும் குறையும் சூழல் உருவாகியுள்ளது.

அதனால் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளது.

இதன் காரணமாக வங்கிகள் வழங்கும் வாகனம், வீட்டு வசதி, தனிநபர் கடன்களுக்கான வட்டி குறையும். வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர அரசு சுற்றுலா துறையை ஊக்குவிக்க ஹோட்டல்களுக்கு மானிய கடன் வழங்குகிறது.

இந்நிலையில் சர்வதேச நிதியம் இலங்கைக்கு பெருந்தொகை நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக” அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.