இலங்கை மத்திய வங்கியின் புதிய தீர்மானம்! டொலரின் பெறுமதி உயருமா?

Report Print Gokulan Gokulan in பொருளாதாரம்

இலங்கை நாணய சபையானது மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அண்மையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்தது. அதன் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாணய சபையானது உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நிதியியல் சந்தைகளிலும் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் தற்பொழுது காணப்படுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாணய சபையின் தீர்மானமானது பணவீக்கத்தினை விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் பேணுவதனுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்ட வேளையில் பொருளாதார வளர்ச்சி நடுத்தர காலப்பகுதியில் அதன் உள்ளாற்றலை எய்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் காணப்பட்டது.

அதேவேளை, நாட்டின் தற்போதைய பண வீக்கம் 3.40ஆக உள்ள நிலையில் இது தொடர்ந்தும் குறைவடையும் பட்சத்தில் நாட்டின் பொருளாதார பின்னடைவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.

அதனைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மேற்கொண்டுள்ளது. அத்தோடு இன்றையதினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபாய் 68 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விற்பனை பெறுமதி 182 ரூபாய் 35 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் டொலரின் விலை 200 ரூபாவையும் தாண்டக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.