வாசனை பொருட்களின் மீள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை இலங்கை பொருளாதாரத்தை உயர்த்தும் : நவாஸ் ரஜாப்தீன்

Report Print Banu in பொருளாதாரம்

சிறு ஏற்றுமதி பயிர்களை மீள் ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கையின் நுண் ,சிறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க கூட்டமைப்பு பாராட்டியுள்ளது.

இது தொடர்பில் இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நவாஸ் ரஜாப்தீன் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நடவடிக்கை இலங்கையின் ஏற்றுமதி பயிர் விவசாயிகள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழிலதிபர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. இலங்கையின் விவசாய ஏற்றுமதியில் 50% இற்கும் அதிகமானவை வாசனைப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் தான். இந்நிலையில் மிளகு, புளி, இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு மற்றும் இஞ்சி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்து மீண்டும் ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதற்காக வர்த்தமானி மூலம் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது.

சிறு ஏற்றுமதி பயிர்கள், உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களையும் ஊக்குவிக்க அரசாங்கம் முயல்கிறது. ஒரு சிலர் சுயலாபத்திற்காக கடந்த பத்தாண்டுகளில் வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை பெறுமதி சேர் வரிகள் எதுவும் சேர்க்காமல் மீண்டும் ஏற்றுமதி செய்ததால் முழு ஏற்றுமதி துறையும், வர்த்தகத்துறையும் பாதிக்கப்பட்டது. இது உள்ளூர் விவசாயிகளையும் எங்களது அமைப்பையும் மிகவும் மோசமாக பாதித்தது.

மீள் ஏற்றுமதிகளுக்கான பெறுமதி சேர் வரிகளை விதிக்கக் கோரி சம்பந்தப்பட்ட துறையினருக்கு எம்மால் பல சந்தர்ப்பங்களில் நிபந்தனை விடுக்கப்பட்ட போதிலும்,அத்தகைய செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையிலே பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில், சிறு ஏற்றுமதி பயிர் விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் வாசனைப் பொருட்கள் மற்றும் சிறு பயிர்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் டிசம்பர் 5ஆம் திகதி தடை விதித்தது. இதனால் பெருமளவில் நன்மைகள் ஏற்பட்டுள்ளன, என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஏற்றுமதியை அச்சுறுத்தும் வகையில், இலங்கையின் அனைத்து வகையான மீள் ஏற்றுமதிகளும் கடந்த தசாப்தத்தில் அமைதியாக அதிகரித்துள்ளன. 2007ஆம் ஆண்டில், இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 1.46% மட்டுமே மீள் ஏற்றுமதி என்று அடையாளம் காணப்பட்டது, ஆனால் ஒரு தசாப்தத்தின் பின்னர் 2017ஆம் ஆண்டில் இதுபோன்ற மீள் ஏற்றுமதிகள் மொத்த ஏற்றுமதியில் 2.88% ஆக இரு மடங்காக அதிகரித்திருந்தது.

2007ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அனைத்து மீள் ஏற்றுமதிகளின் மதிப்பு (வாசனைப் பொருட்கள் உட்பட) 2017இல் 400% அளவில் சடுதியாக உயர்வடைந்தது.

இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு மீள்ஏற்றுமதி உள்ளூர் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதியை மேலும் மோசமாக பாதித்தது.

இலங்கையின் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 2018இல் சரிவு ஏற்பட்டது. வாசனைப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி 11.53% ஆககுறைந்து 2017இல் 408.17 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 361.1 மில்லியன் அமெரிக்க டொலராக குறைந்தது.

2018ஆம் ஆண்டில், இலங்கையின் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதிக்கான முக்கிய சந்தை மெக்ஸிகோ, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகும்.

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இது இலங்கையில் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை புதுப்பித்து அவர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.