வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் 2019ஆம் ஆண்டு 11 மில்லியன் வருமானம்

Report Print Theesan in பொருளாதாரம்

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் கடந்த வருடம் 11 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 5 வருட காலத்தில் அதிகப்படியான வருமானத்தினை ஈட்டிய வருடமாக 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

அத்துடன் பண்ணையின் நிகர இலாபமாக 5 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் விதை நெல் விற்பனை மூலமான வருமானமாக 4.2 மில்லியனும் விதை நடுகைப்பொருட்கள் மூலமாக 4.5 மில்லியன் ரூபாவும் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

இதேவேளை கால்நடை உற்பத்தி வருமானமாக 2015இல் இருந்து 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சராசரியாக 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வருமானமாக பெறப்பட்ட போதிலும் 2019ஆம் ஆண்டு 1.2 மில்லியன் வருமானமாக கிடைத்துள்ளதாக விவசாய திணைக்களத்தின் வருமான காட்சிப்படுத்தல்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளது.

தானியங்கள் தூற்றல் மூலமான வருமானமாக 1.2 மில்லியன் வருமானமாக பெறப்பட்டுள்ளதுடன் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கியமை உட்பட ஏனைய துறைசார் வருமானமாக 2.5 இலட்சமும் வருமான பெருக்கமாக உள்ளது.

இந் நிலையில் விற்பனைக்கு தயாராக உள்ள மரக்கன்றுகளாக பல வித கன்றுகள் 37 மில்லியன் பெறுமதியானவை கையிருப்பில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் அதிகரித்த இலாபத்தினை அடைந்த முறை தொடர்பாக விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபானுவிடம் கேட்டபோது கூடிய முகாமைத்துவம், கண்காணிப்பு பண்ணை முகாமையாளரின் அர்ப்பணிப்பான சேவை உட்பட ஊழியர்களின் ஒன்றிணைந்த சேவையாற்றும் மனப்பான்மை அதிக லாபத்தினை பெற வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.