கொரோனா வைரஸ் உலக பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிப்பு

Report Print Ajith Ajith in பொருளாதாரம்
57Shares

கொரோனா வைரஸ் உலக பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த பாதிப்பை 0.1 முதல் 0.2 வரை குறைக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

துபாயில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிரிஸ்டினா ஜோர்ஜீவா இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில், இந்த தொற்றின் காரணமாக இதுவரை 1600பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தொற்று எவ்வளவு சீக்கிரம் கட்டுப்படுத்தப்படுகின்றதோ அதன் அடிப்படையிலேயே பொருளாதார பாதிப்பும் குறைக்கப்படும்.

எனவே எவரும் முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. இன்னும் 10 நாட்களில் தம்மால் இது தொடர்பில் புள்ளிவிபரத்தை தெரிவிக்க முடியும்.

கடந்த ஜனவரியில் உலக பொருளாதாரத்தை பொறுத்தவரையில் குறைந்த பொருளாதார வளர்ச்சி நிலவியது.

0.1 முதல் 3.3 வீதமான வளர்ச்சியே அப்போது நிலவியது. எனினும் கடந்த வருடங்களில் இது 2.9 வீதமாக இருந்தது.

சீனாவை பொறுத்தவரையில் கொரொனா வைரஸ் தொற்றை எந்தளவு சீக்கிரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்பது இன்னும் தெரியவில்லை.

அதேபோல இந்த தொற்று ஏனைய நாடுகளுக்கு பரவுமா? என்பதும் தெரியவில்லை. எனவே இந்த யதார்த்தங்களை பொறுத்தே உலக பொருளாதாரத்தின் தாக்க வீதத்தை கணக்கிட முடியும்.

தற்போதைய நிலையில் உலகம் இன்று குறைந்த உற்பத்தி வளர்ச்சி, குறைந்த பொருளாதார வளர்ச்சி, குறைந்த வட்டி வீதம் மற்றும் குறைந்த பணவீக்கம் என்ற அம்சங்களில் சிக்குண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியப்பணிப்பாளர் உரையாற்றிய இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரேசா மே, அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.