பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டமையைக் கண்டித்தே கட்டடத்தொகுதிக்கு முன்பாக மாணவர்கள் இன்று (08) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தைச் செய்யவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மேற்படி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர், பல்கலைக்கழக வளாகத்துக்குள் புதன்கிழமை (07) முதல் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்மாணவர்களுக்கான தடையை உடனடியாக நீக்குமாறு மாணவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல்கலைக்கழகத்தில் அதிகரித்துவரும் சிற்றுண்டிச்சாலைகளை குறைக்க வேண்டும், விளையாட்டுத்துறை சம்பந்தமான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும், மாணவர்களின் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், எனக்கூறியும்
பல்கலைக்கழகத்தில் கூட்டங்கள் நடத்தும் உரிமையை வழங்க வேண்டும், விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும், பெயர்ப்பலகைகளை மும்மொழிகளில் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.