வட மாகாணப் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பதற்காக இடம்பெற்ற போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை இந்த மாதம் 16,17,18 ஆகிய மூன்று தினங்களும் இடம்பெறும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2016ம் ஆண்டில் 1000 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கிடைத்தது.
அதற்காக விண்ணப்பஙகள் கோரப்பட்ட வேளையில் அதிக பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதனால் குறித்த பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சை இடம்பெற்றது. அவ்வாறு இடம்பெற்ற பரீட்சையின் பெறுபேறும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சையில் மொத்தமாக 2 ஆயிரத்து 452பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களுக்கு இடம்பெற்ற இருபாடப் பரீட்சைகளிலும் 40 புள்ளிகள் என்ற அடிப்படையில் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவரும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
அதில் இருபாடங்களில் ஒன்றிலேனும் 40 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய 2 ஆயிரத்து 452 பட்டதாரிகளில் இரு பாடங்களிலும் சித்தி அடைந்து 80 புள்ளிகளுக்கும் மேலான அடைவு மட்டத்தினை எட்டியவர்களாக 779 பேர் மட்டுமே காணப்படுகின்றனர்.
அவ்வாறு அடைவு மட்டத்தினைத் தாண்டிய பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் இம் மாதம் 16, 17 , 18ம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றதும் தகுதியான அனைவருக்கும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே அவர்களுக்கான நியமனங்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுபவர்களில் அதிகமானோர் தமிழ் , வரலாறு ,விவசாயம் , உளவியல் , தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவார்கள் என மேலும் தெரிவித்தார்.