உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாகிய வேளையில்...

Report Print Samy in கல்வி
188Shares

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் கல்வி முறைமையில் பாடசாலைக் கல்வி நிறைவு பெறுகின்ற ஒரு பரீட்சையாகவும் உயர்தரப் பரீட்சை அமைவதால்.பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகள் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் இப்போது தமது அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி சிந்திக்கத் தலைப்படுவர்.

இதில், பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறும் மாணவர்கள் தவிர, ஏனைய மாணவர்கள் இரண்டாவது தடவை பரீட்சைக்கு தோற்றுதல் அல்லது வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொள்வது அல்லது தொழில் வாய்ப்பைத் தேடுதல் என்றவாறான தீர்மானங்களை எடுத்துக் கொள்வர்.

இவ்வாறு மாணவர்கள் எடுக்கின்ற தீர்மானங்களே அவர்களின் எதிர் காலம் ஆகின்றது.

ஆகையால் மாணவர்கள் எடுக்கின்ற தீர்மானங்களுக்கான வழிகாட்டல்கள் தேவைப்படும்.பொதுவில் க.பொ.த உயர்தரத்தில் மாணவர்கள் தோற்றுப்போதல் என்பதற்கான காரணத்தில் பெரும் பகுதி பாடத்தெரிவு என்பதாகவே இருக்கும்.

குறிப்பாக மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் தாம் கற்கவிருக்கும் பாடத்தெரிவு தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

மாறாக தமது சகபாடிகள் எந்தப்பாடத் தொகுதியை தெரிவு செய்கிறார்களோ இதையே தாமும் தெரிவு செய்வது என்றாகி விடுகிறது.

தமக்கு பொருத்தமான - பல்கலைக்கழக அனுமதிக்கு சாதகமான பாடங்களை சரியான முறையில் தெரிவு செய்யாததன் காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உரிய இலக்கை அடைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இதன் காரணமாக கல்வியில் வெறுப்பு நிலை ஏற்படுகின்றது.தவிர, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் கிடைப்பனவுக்குப் பின்னரும் தீர்மானம் எடுத்தல் என்ற விடயம் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றுவதா? அல்லது பட்டப்படிப்பை தொடரக்கூடிய கற்கை நெறியை தெரிவு செய்வதா? அல்லது கல்வியியல் கல்லூரிகளுக்காக காத்திருப்பதா என்ற பல்வேறு வினாக்களுக்கு சரியான முறையில் உரிய ஆலோசனைகள் பெற்று தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இல்லையேல் எடுத்த தீர்மானமே எல்லாவற்றுக்கும் காரணமாகி விடும்.அதே நேரம் சரியான தீர்மானங்கள் எடுக்க தவறுகின்ற சந்தர்ப்பத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை இழக்க வேண்டி வரும் என்பதுடன் ஒரு மாணவரின் எதிர்காலம் சின்னாபின்னப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

எனினும் க.பொ.த உயர்தரத்தில் தோற்றிய மாணவர்கள் பலர் தமக்கு பொருத்தமில்லாத - பெறுமதியில்லாத - எதிர்காலத்தில் எந்தப் பயனுமில்லாத சில கற்கை நெறிகளுக்கு சென்று பணத்தையும் காலத்தையும் வீணாக்கின்றனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பின்னரும் தாம் ஏதோ படிப்பதாக காட்டிக் கொள்வதற்கான ஏற்பாடு இதுவே அன்றி, நின்று நிதானமாக சிந்தித்து எடுத்த தீர்மானம் அல்ல என்பது தெட்டத் தெளிவு.

எதுவாயினும் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி பரீட்சை பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் தமது எதிர்காலத் தீர்மானம் பற்றி முடிவுகளை எடுப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.

இந்த வழி காட்டல்களை சமூகநலன் பேணும் பொது அமைப்புக்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற அமைப்புகள் காலந்தாழ்த்தாது மேற்கொள்வது அவசியமாகும்.

இதை விரைந்து செய்யாத விடத்து மாணவர்கள் தமக்கு தெரிந்தவர்களிடம் அல்லது தமது நண்பர்களிடம் அல்லது தாமாகவே தீர்மானம் எடுப்பர். இது ஆரோக்கியமானதாக இருந்தால் நன்று.

தவறும் பட்சத்தில் எதிர்காலப் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதால், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் தீர்மானம் எடுப்பதற்கு நாம் உதவ வேண்டும்.

- Valampuri

Comments