தோட்டம் செய்து பாடசாலைக்கு நடந்து சென்று உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவன்

Report Print Thileepan Thileepan in கல்வி

வெளியாகிய கல்விப் பொது உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் உயிர்முறைகள் தொழில்நுட்பபிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மணிவேல் தர்மசீலன் என்ற மாணவனே உயிர்முறைகள் தொழில் நுட்பப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.

வடமாகாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

இது குறித்து அந்த மாணவன் கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு தான் படித்தேன். ஆனால் இப்படி வருவேன் என எதிர்பார்க்கவில்லை. எனது அம்மா, அப்பா தோட்டம் செய்து தான் என்னை படிக்க வைத்தார்கள்.

நானும் அவர்களுடன் இணைந்து விடுமுறை நாட்களிலும், மாலை வேளைகளிலும் தோட்டம் செய்து தான் படித்தேன்.

எனது கிராமம் செட்டிகுளம், நித்திக்குளம் மிகவும் பின் தங்கியது. இக்கிராமத்தில் இருந்து எனது பாடசாலை 9 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

அதில் இரண்டு கிலோமீற்றர் தூரம் வாகனப் போக்குவரத்து இல்லை. நடந்து சென்று பிரதான வீதிக்கு போனதும் பேருந்தில் ஏறியே பாடசாலை சென்று படித்தேன்.

சில நாட்களில் முதலாம் பாடம் முடிந்த பின் கூட நான் பாடசாலை போன சம்பவம் உள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கு இரண்டு பாடத்திற்கு சென்றிருந்தேன். அதற்கு 15 கிலோமீற்றர் பேருந்தில் சென்றே படித்தேன்.

இப்படியான ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து ஒரு விவசாயி மகன் வடமாகணத்தில் முதலிடம் பெற உழைத்தவர்களை என்னால் மறக்க முடியாது.

எனது பாடசாலை அதிபர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், நான் நடந்து செல்லும் போது சில சந்தர்ப்பங்களில் என்னை ஏற்றி பேருந்து வரும் பாதையில் இறக்கிவிட்ட இந்த ஊர் மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தமது வியர்வை சிந்தி என்னை படிக்க வைத்த அம்மா, அப்பா எல்லோருக்கும் எனது நன்றிகள்.

எதிர்காலத்தில் பரீட்சை எழுதவுள்ள எனது தம்பி, தங்கையர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு விவசாயி மகனான என்னால் நடந்து சென்று இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் சாதிக்க முடிந்திருக்கின்றது என்றால் ஏன் உங்களால் முடியாது.

நிச்சயமாக ஒவ்வொரு மணித்துளிகளையும் பயனுள்ளதாக பன்படுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள் எனத் தெரிவித்தார்.

Comments