வகுப்புத்தடையை நீக்க கோரி தொடர் போராட்டத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

Report Print Nesan Nesan in கல்வி
62Shares

அம்பாறை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆறு நாட்களாக வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பினை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதனொரு கட்டமாக இன்று(10) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தில் வேலை செய்பவர்களை வெளியேற விடாது ஒன்றரை மணித்தியாலத்திற்கும் மேலாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் வணிக முகாமைத்துவ மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

எங்களது மாணவர்கள் 10 பேரை எந்தவித காரணமும் இன்றி பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். அவர்களை உடனே உள்ளெடுக்க வேண்டும்.

உங்களுக்கான தீர்வினை ஒரு மணித்தியாலத்திற்குள் தருவோம். நீங்கள் வெளியே போகவேண்டும் என்று கூறியதும் நாங்கள் பல மணிநேரம் காத்திருந்தோம் ஆனால் எங்களுக்கான எந்த முடிவையும் பெற்றுத்தரவில்லை

மேலும் நிர்வாகம் குறித்த பிரச்சினையை வேறு விதமாக கொண்டு போவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

நிர்வாகத்திற்கு நாங்கள் தடையாக இருக்கின்றோம் என்று கூறி பொலிசாரை அழைத்திருக்கின்றார்கள் எங்களுக்கு யாரிடத்திலும் பிரச்சினை இல்லை.

எங்களுக்கான தீர்வினை வழங்க வேண்டியவர் இந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அவர் நினைத்தால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். அவ்வாறு தீர்க்காவிட்டால் இந்தப்போராட்டம் தொடர்ந்து கொண்டே செல்லும் எனவும் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்துக்கூறுகையில்..

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலே 7 பீடங்களை உடைய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள் அதில் 6 பீடங்களை உடைய மாணவர்கள் எந்தவித ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடாமல் தங்களது கல்வி நடவடிக்கைகளை சீரான முறையிலே மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறிப்பாக வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் உள்ள 150க்கும் குறைவான மாணவர்களே தொடர்ந்து ஆறு நாட்களாக வகுப்புக்களை பகிஸ்கரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கடந்த 2016 ஆண்டு 12 ஆம் மாதம் தொழிநுட்ப பீடத்தில் பகிடி வதை காரணமாக 10 மாணவர்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களில் 4 பேரை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர்களை உள்ளே எடுத்திருக்கின்றோம் ஏனைய 6 பேருக்கும் தொடர்ந்து வகுப்புத்தடை உத்தரவினை பிறப்பித்திருக்கின்றோம்.

எதிர்வரும் 18ஆம் திகதியே எமது செனட் சபை கூடவுள்ளது அந்த கூட்டத்திலே இவர்கள் ஆறுபேரினதும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு இறுதித்தீர்மானம் எடுக்கப்படும்.

ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் மாணவர்கள் அவர்கள் 6 பேரையும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக வகுப்புக்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற அரசியல் பின்னனியான காரணங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments