கிழக்கு பல்கலைக்கழக அசாதாரண நிலை: அவசர அவசரமாக ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு

Report Print Reeron Reeron in கல்வி

கிழக்கு பல்கலையில் நேற்றைய தினத்திலிருந்து மாணவர்களின் முற்றுகை எதிர்ப்பு போராட்டமானது தொடர்ந்து நீடிப்பதினால் குறித்த விடயம் தொடர்பான தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்றை கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் இன்றைய தினம் அவசர அவசரமாக கூட்டியது.

குறித்த ஊடக அமர்வில் கிழக்கு பல்கலையின் பதில் உபவேந்தர் கலாநிதி கே.ஈ.கருணாகரன், கலை கலாசார பீட பீடாதிபதி முணியான்டி ரவி, சௌபாக்கிய பீட பீடாதிபதி கலாநிதி எம்.வினோபவா ஆகிய பீடாதிபதிகள் உட்பட துறைத் தலைவர்கள் விரிவுரையாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பதில் உபவேந்தர் கலாநிதி கே.ஈ.கருணாகரன்,

கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து விடுதி வசதி தொடர்பாக மாணவர்களுக்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

அதாவது தற்போது எதிர்ப்பில் உள்ள மாணவர்கள் 2ம் மற்றும் 3ம் வருடத்திற்குள் உள்நுழையும் போது இவ்வருடம் விடுதி வசதிகள் வழங்கப்படமாட்டது என தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 3ம் திகதியில் இருந்து குறித்த விடுதி வசதி தொடர்பாக தபால் மூலம் வீடுகளுக்கு தபால் அனுப்பி வைக்கப்பட்டது.

விடுதி வசதிகள் அடிப்படையில் பெண்களுக்கு 1554 விடுதிகள் மற்றும் ஆண்களுக்கு 631 விடுதிகள் உள்ளது.

இவற்றில் புதுமுகமாக 1400 பேர் வரவுள்ளனர். அதில் 1000 பெண்கள் மற்றும் 400 ஆண்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இறுதி வருட மாணவர்களாக 680 பேர் சேர்க்கப்பட வேண்டியுள்ளனர். இது மேலதிக தொகையாக உள்ளது. அதனால் போதுமானளவு இடவசதி என்பது இல்லை.

நேற்றைய தினம் நிர்வாகத்தினால் உத்தியோக பூர்வமாக மாணவர்களை வெளியேற அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில், அதிகமான மாணவர்கள் வெளியேறியுள்ளனர். குறைந்தளவான மாணவர்களே குறித்த முற்றுகை எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று பிற்பகல் மீண்டும் பல்கலைகழக நிர்வாக கூட்டம் நடாத்தப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Comments