2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றி இடைநிறுத்தி வைக்கப்பட்ட 80 மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிட பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தாம் வசிக்கும் மாவட்டத்திற்கு வெளியே சென்று கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எழுதிய காரணத்திற்காக குறித்த மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
எனினும் பெறுபேறுகள் வெளியிடப்பட்டாலும் இந்த மாணவர்களுக்கான மாவட்ட வெட்டுப்புள்ளி பரீட்சை எழுதிய மாவட்டத்தின் பட்டியலுக்கு உட்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய பிரதேசத்தில் இருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சிறப்புச் சலுகையைப் பெறுவதற்கு ஏனைய பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதி பல்கலைக்கழகங்களுக்கு சென்றுவிடுவார்கள்.
இவ்வாறு பரீட்சை எழுதிய 80 மாணவர்கள் பற்றி பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.