இந்துசமய பாடத்துக்கென புதிய நிபுணத்துவக் குழு அமைக்க முடிவு

Report Print Thiru in கல்வி
39Shares

இந்து சமய பாடப்புத்தகங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்துசமய பாட நிபுணத்துவ குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய பாடக்கலைத்திட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்ற விடயங்களை மாணவர்கள் ஆராய்ந்து, அவற்றை விரும்பி கற்கும் விதத்தில் பாடப்புத்தகத்தில் மாற்றங்களை செய்வதற்காக இந்த நிபுணத்துவ குழு உருவாக்கப்படவுள்ளது.

குறித்த குழுவில், கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைத் திணைக்கள பாட விடயங்களுக்கு பொறுப்பான மேலதிகாரிகள், பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைசார் நிபுணர்கள், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் உள் வாங்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உருவாக்கப்படவுள்ள நிபுணத்துவ குழுவானது, கடந்த காலங்களில் அரசு இந்து சமய பாடநெறி மற்றும் பாடத்திட்டம் தொடர்பாக உரிய கவனம் செலுத்தாமையின் காரணமாக, பாடத்திட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் காணப்படுகின்றது.

இதனால் இந்துசமயத்தை கற்பதில் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். எனவே இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நிபுணத்துவ குழு அமைக்கப்படவுள்ளது.

இந்துசமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(18) கல்வி இராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா கல்வி அமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் மதிவாணன், தேசிய கல்வி நிறுவகத்தின் இந்து சமய பாடத்திற்கு பொருப்பான விரிவுரையாளர் பொன் ஜெயரூபன், பேராசிரியர்களான சி.பத்மநாதன், ஏ.என்.கிருஸ்ணவேனி மற்றும் டாக்டர்.க.இரகுவரன் உட்பட ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன்,

இந்து சமய பாடத்திட்டத்தில் ஆண்டு ஒன்று முதல் ஆண்டு 11 வரை பாடத்திட்டத்தில் மாணவர்களின் தகுதிக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற பலர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவாநந்தாவும் கருத்து தெரிவித்துள்ளார். எனவே இதற்கான ஒரு முறையான ஏற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதன்போது பல்வேறு கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றது.

இந்த நிலைமை தொடருமானால் மாணவர்கள் எதிர்காலத்தில் இந்து சமயம் தொடர்பான கற்கைக்கு முக்கியத்துவம் வழங்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த பாடத்திட்டம் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிடும் எனவே அதற்கு இடமளிக்க முடியாது.

இந்து சமய பாட புத்தகத்தில் காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்யபடுவதோடு, ஏதிர்காலத்தில் இந்த நிபுணத்துவக்குழுவின் சிபாரிசுக்கு அமையவே பாடதிட்டம்,பாட புத்தக வெளியீடு அனைத்தும் நடைபெரும் என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments