தந்தையை இழந்து சிறுவர் இல்லத்தில் படித்து சாதனை படைத்த தமிழ் மாணவன்

Report Print V.T.Sahadevarajah in கல்வி

சம்மாந்துறை - வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 12 வருடங்களாக கல்வி கற்ற ஜெயசீலன் கிஷோர் என்ற மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் 3A சித்தியை பெற்று அம்பாறை மாவட்டத்தில் 6ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்முனை - துரைவந்திய மேட்டை பிறப்பிடமாகக் கொண்ட கிஷோர் தந்தை இல்லாத காரணத்தினால் வீரமுனையிலுள்ள சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 3ஆம் வகுப்பில் இணைந்துள்ளார்.

தொடர்ந்து 12 வருடங்கள் இல்லத்தில் வாழ்ந்து நன்றாக படித்து க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

இவர் தனது வெற்றிக்கு, வீரமுனை இல்லமும் அதன் நிர்வாகி விநாயகமூர்த்தியும் எனது தாய் கௌரி அம்மாவும் தான் என தெரிவித்ததுடன், மேலும் தமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

தாம் ஒரு வழக்கறிஞராக வந்து பின்னர் இலங்கை நிர்வாக சேவைக்குள் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்பதே இலட்சியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “இந்த இல்லம் இருந்திராவிட்டால் இன்றைய இந்த நிலை இல்லை. எனது ஒட்டுமொத்த நன்றியும் விசுவாசமும் இல்லத்திற்கே. எதிர்காலத்தில் எனது பூரண பங்களிப்பும் இல்லத்திற்கு கிடைக்கும்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.