வடக்கில் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

Report Print Samy in கல்வி

ஜி.சி.ஈ உயர்தரத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து பாடசாலைப் பரீட்சார்த்திகளாகத் தோற்றிய 11 ஆயிரத்து 591 மாணவர்களில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதேநேரம் 7 ஆயிரத்து 925 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.அதாவது 68.37 வீதத்தினர் தகுதி பெற்றுள்ளனர்.

அதேநேரம் தோற்றியோரில் 816 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை.

அண்மையில் வெளியான ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் வீத அடிப்படையில் மாகாண நிலையில் வடக்கு மாகாணம் முதலாம் இடத்தையும், சப்பிரகமுவ மாகாணம் இரண்டாம் இடத்தையும், ஊவா மாகாணம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

பாடசாலை பரீட்சார்த்திகளையும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளையும் உள்ளடக்கிய பரீட்சைப் பெறுபேறுகளின்படி தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் மூன்றாம் இடத்தையும், சப்பிரகமுவ மாகாணம் முதலாம் இடத்தையும், ஊவா மாகாணம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.

வடக்கு மாகாணத்தில் இருந்து தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளையும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளையும் உள்ளடக்கிய ரீதியில் 13 ஆயிரத்து 643 மாணவர்களில் 8 ஆயிரத்து 956 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர். 65.65 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர்.

மாவட்ட நிலையில் தேசிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் மன்னார் மாவட்டம் 1ம் இடத்தையும், முல்லைத்தீவு மாவட்டம் 5ம் இடத்தையும் யாழ்ப்பாண மாவட்டம் 9ம் இடத்தையும், வவுனியா மாவட்டம் 16வது இடத்தையும், கிளிநொச்சி மாவட்டம் 21வது இடத்தையும் பெற்றுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 68.41 வீதத்தினரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 66.47 வீதத்தினரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 65.88 வீதத்தினரும், வவுனியா மாவட்டத்தில் 64.51 வீதத்தினரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 62.30 வீதத்தினரும் சித்தியடைந்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உயர்தரப் பரீட்சைக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 330 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.மூன்று பாடங்களிலும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 104 மாணவர்கள் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 64.38 வீதத்தினர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

- Uthayan