விடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய தீர்மானம்

Report Print Sujitha Sri in கல்வி

எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முதல் விடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைக்குள் நிறைவு செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பின்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் பாடசாலைகளின் விடுமுறை நிறைவடைந்த பின்னரான முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விடைத்தாள் திருத்தப் பணிகளின் காரணமாக நாட்டில் 70இற்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்படும் நிலையில் 35,000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதனால் ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுவதுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையிலேயே விடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் மாத விடுமுறை நிறைவிற்குள் துரிதமாக மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.