பாடசாலைக்கு அதிபர் வருகைதராமையால் நேர்ந்த விபரீதம்

Report Print Thiru in கல்வி

கண்டி - தெல்தோட்டை நாராங்ஹின்ன பாடசாலையின் பூட்டை உடைத்து பாடசாலையை திறந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

குறித்த பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தராமையின் காரணமாக பாடசாலையை திறக்க முடியாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியில் காத்திருந்துள்ளனர்.

இதனையடுத்து பிள்ளைகளின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்து கல்வி வலயத்தின் உத்தரவின் அடிப்படையில் பாடசாலைக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துக் கொண்டு பாடசாலைக்குள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் பெற்றோர் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மாகாண கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக குறித்த அதிபருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் குறித்த பாடசாலை அதிபர் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தொடர்பாக மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வலய கல்வி பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் ஒரு மணிவரையிலும் பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தரவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அதிபர் காரியாலயத்தை திறக்க முடியாதுள்ளதாகவும், ஆசிரியர்கள் வரவுப் பதிவேடுகளில் கையொப்பம் இட முடியாதுள்ளதுடன் மாணவர்களின் வருகை பதிவேடுகளிலும் பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.