தடை நீக்கப்பட்டபோதிலும் வகுப்புகளுக்கு சமூகமளிக்காத யாழ்.பல்கலை மாணவர்கள்

Report Print Sumi in கல்வி

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களிற்கான வகுப்புத்தடைகள் இன்று நீக்கப்பட்டிருந்த போதிலும் இன்றையதினம் மாணவர்கள் எவரும் வகுப்புகளிற்கு திரும்பவில்லை என யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களிற்கிடையில் இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், குறித்த இரண்டு வருட வகுப்புகளும் நேற்றுவரை பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த மோதலில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களிற்கான வகுப்புத்தடைகள் இன்று முதல் நீக்கப்படுவதாக நேற்று பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்றையதினம் கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட வகுப்புகளிற்கு விரிவுரையாளர்கள் சென்றிருந்தபோதிலும் மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை.

இந்நிலையில், இவ்விடயத்தில் இருதரப்பு மாணவர்களிடமும் பேசி தீர்வொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கடிதம் ஒன்றின் மூலம் தமக்கு தெரியப்படுத்தியிருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.