சவால்களோடு போட்டி போடும் நிலையில் மாணவர்கள்: சிறீதரன்

Report Print Arivakam in கல்வி

இன்றைய நவீன இலத்திரனியல் உலகத்தில் கல்வியை எதிர்கொள்ளல் என்பது மிகப்பெரிய சவாலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

புலோலி அபிவிருத்தி நிதியத்தின் கல்விக்கு கைகொடுப்போம் வருடாந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நவீன உலகத்தின் சவால்களை எதிர்கொண்டு தங்களை ஒழுக்க நெறியின் பால் கல்வி ரீதியாக வளர்த்துச்செல்ல துணியவேண்டும். இன்றைய நவீன இலத்திரனியல் உலகத்தில் கல்வியை எதிர்கொள்ளல் என்பது மிகப்பெரிய சவாலாகும்.

தொலைக்காட்சிகளின் நவீனத்துவ தொடர்வரவுகள் கணினிகளினூடான ஈர்ப்பு இணையத்தளங்கள் ஊடான ஆர்வம் முகநூல்களுக்கூடான மாணவர்களின் செயற்பாடு என்பது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை செலுத்துகின்றது.

கையடக்கத் தொலைபேசிகள் என்பதும் கணினிகள் என்பதும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளையும் வாசிப்புத்திறனையும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உறிஞ்சி எடுக்கின்றது.

இந்த சூழ்நிலையில் மாணவர்கள் பாடசாலைக் கல்வி பாடசாலையின் உடல் உளம் சார்ந்த புறக்கிருத்திய செயற்பாடுகளில் ஈடுபடுதல் பெருமளவில் தடுக்கப்படுகிறது.

இவ்வாறான சூழலில் ஏழை மாணவர்களின் நலன் கருதி புலோலி அபிவிருத்தி நிதியம் எடுத்திருக்கும் முயற்சியை உளமார பாராட்டுகிறேன் என்றார்.

வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சுரேஸ்குமாரின் நெறிப்படுத்தலில் புலோலி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வைத்தியகலாநிதி திருமதி முல்லை பரமேஸ்வரன் இடம் பெற்ற நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் புலோலி அபிவிருத்தி இணையத்தின் இணைப்பாளர் தம்பையா சிவகுருநாதன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் த.ஐங்கரன் பண்டிதர் பரந்தாமன் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பெருமளவானோர் பங்கு பற்றினர்.