எப்படியிருந்த வடக்கு கிழக்கு இன்று இப்படியிருக்கிறதே! ஆதங்கப்பட்ட பீடாதிபதி

Report Print Nesan Nesan in கல்வி

ஆரம்பகாலத்தில் கல்வி மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் தமிழர்களே என தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வணிகத்துறைக்கு பொறுப்பான பீடாதிபதி எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஶ்ரீஇராமகிருஸ்ண கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்வு கல்லூரி அதிபர் கே.சோம்பால தலைமையில் மகிந்தோதய ஆய்வுகூட மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த தலைமைத்துவ பயிற்சி நெறியை சிறந்த முறையில் நடாத்துவதற்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி எஸ்.குணபாலன் கலந்துகொண்டிருந்ததுடன் கல்லூரியின் பிரதி அதிபர் தயாரூபன் உட்பட ஒழுக்கக்கட்டுப்பாட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்துரைத்த பீடாதிபதி,

கல்வியில் ஆரம்ப காலந்தொட்டு இலங்கை தொடக்கம் ஏனைய நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியவர்களாக தமிழர்களே இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று தமது நாட்டை பொறுத்தவரையில் கல்வியில் இறுதி இரண்டு இடத்தையும் பிடித்துள்ள மாகாணமாக வடக்கும், கிழக்கும் காணப்படுகின்றது.

கல்வியில் இரண்டு மாவட்டங்களும் இறுதி இரண்டு இடத்தினை பிடித்திருந்தபோதும் மதுபான உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ள மாகாணங்களாக இந்த இரண்டு மாகாணங்களுமே திகழ்கின்ற அதே நேரம் ஒழுக்க செயற்பாடுகளில் மிகவும் கீழ நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் மாகாணங்களாக இந்த இரண்டு மாகாணங்களும் திகழ்கின்றது.

தற்காலத்தில் நடைபெறும் ஒழுக்க சீர்கேடுகளை ஒழித்து எமது சமூகத்தினை நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டியவர்கள் இன்று கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களே இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் அதனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் தங்களது கடமைகளை பொறுப்புள்ளதாக அமைத்து செயற்படவேண்டும்.

ஆரம்ப காலத்தில் தலைவர்கள் பிறந்தார்கள் ஆனால் தற்காலத்தில் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். தற்காலத்தில் ஒருவர் மீது ஆளுமை விருத்தியினை ஏற்படுத்தி விடுவதன்மூலம் அவர்களை சமூகத்திற்கு ஏற்ற புதிய தலைவர்களாக்க உருவாக்க முடியும்.

இன்று இந்த இடத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து மாணவர் தலைவர்களும் இந்த பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளிலும் பொறுப்பு மிக்கவர்களாக திகழவேண்டும். அவ்வாறு திகழும் பட்சத்திலே இந்தப்பாடசாலையின் வளர்ச்சியை சிறந்தமுறையில் கொண்டுசெல்ல முடியும்.

கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் மாணவர் தலைவர்கள் செயற்படவேண்டும். தலைவன் என்று சொல்லப்படுபவன் முதலில் ஒழுக்கம் உள்ளவனாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அவன் ஒழுக்கம் உள்ளவனாக இருக்கும்போதுதான் ஏனையவர்களையும் ஒழுக்கமுள்ளவனாக மாற்ற முடியும்.

தலைமைத்துவத்தின் மிக முக்கியமான பண்பு தலைவன் என்பவன் ஒழுக்கமுள்ளவனாக இருத்தல் வேண்டும். அதாவது உங்களை ஏனைய மாணவர்கள் பின்பற்ற வேண்டுமாக இருந்தால் முதலில் நீங்கள் அவர்களுக்கு ஒழுக்க ரீதியில் முன்னுதாரணமாணவர்களாக திகழவேண்டும்.

உரிமைக்காகவும் தனது மக்களுக்காகவும் மிக நீண்ட காலம் போராடி அந்த மக்களின் ஒரு பெருந்தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களுக்காக சிறைவாசம் அனுபவித்து ஜனநாயக ரீதியாக போராடித்தான் எமது உரிமையை பெற்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் போராடி வெற்றியீட்டி நாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்திய ஒரு தலைவன்தான் நெல்சன் மண்டேலா. இவர் இறுதியாக கூறிய கருத்து என்னவென்றால் ஒரு சமூகத்தின் வறுமையையும், அறியாமையினையும், மூடநம்பிக்கையினையும் உடைத்தெறியக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் கல்வியே என்ற கருத்தினை முன்வைத்தார்.

ஆரம்பப்பிரிவு தொடங்கி உயர்தரம் மட்டும் கல்வியை கற்றுக்கொண்டுவந்து இடைநடுவில் தனது தாய்தந்தையர்களுக்கு, சமூகத்திற்கு, பாடசாலைக்கு மாறாக பிறழ்வாக போவீர்களானால் உங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக போய்விடும் எனவும் கூறினார்.