கொழும்பில் மாத்திரம் போட்டிப் பரீட்சை - வெளி மாவட்ட பரீட்சார்த்திகளுக்கு அசௌகரியம்

Report Print Gokulan Gokulan in கல்வி

இலங்கை ஆசிரிய சேவையில் தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் ஆகியவற்றுக்கான உளவள ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பரீட்சை நிலையங்கள் கொழும்பில் மாத்திரமே அமையப் பெற்றுள்ளதால் பரீட்சாத்திகள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பரீட்சை நிலையங்கள் இன்று கொழும்பில் மாத்திரமே அமையப் பெற்றுள்ளதால் நாடளாவிய ரீதியில் வெளி மாவட்ட பரீட்சார்த்திகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

போக்குவரத்து சிரமங்கள் உட்பட கொழும்பில் உள்ள குறித்த பாடசாலைகளுக்கான பஸ் மார்க்கத்தினை கண்டறிந்து கொள்வதில் பல சிரமங்களையும் எதிர்கொண்டதாகவும் இதனால் மன உளைச்சலுடனே குறித்த பரீட்சையை எதிர் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

வட கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நீண்ட நேர பிரயாணத்தை மேற்கொண்டு உரிய பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலை காணப்பட்டதாகவும், போக்குவரத்து பல கிலோ மீற்றர் தூரம் சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இது தவிர பரீட்சை மண்டபங்களில் தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகளுக்கு சிங்கள மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், இதனால் வட கிழக்கை சேர்ந்தவர்கள் கடும் மொழிப் பிரச்சினையை எதிர் கொண்டதாகவும் கவலை தெரிவித்துள்ளார்கள்.

எதிர் காலங்களில் அரச பதவிகளுக்கான ஆட்சேர்ப்புப் பரீட்சைகளை மாவட்டங்களின் அடிப்படையில் நடாத்துமாறு உரியவர்களுக்கு இதன் போது கோரிக்கை விடுத்திருந்தனர்.