கிழக்கு மாகாண மேன்முறையீட்டு ஆசிரியர் இடமாற்றசபை ஞாயிறன்று

Report Print V.T.Sahadevarajah in கல்வி

கிழக்கு மாகாண மட்ட மேன்முறையீட்டு ஆசிரியர் இடமாற்ற சபை அமர்வு எதிர்வரும் ஞாயிறன்று மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெறுமென்று கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு இடமாற்ற சபை அமர்வு கடந்த 26ஆம் திகதி நடைபெறவிருந்தபோதிலும் சில வலயங்களிலிருந்து மேன்முறையீட்டு இடமாற்ற பட்டியல் வந்துசேராத காரணத்தினால் இது ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களைப்போலல்லாது இம்முறை மாகாண மட்ட மேன்முறையீடுகளை அந்தந்த வலயத்திலும் இடம்பெற்று அவர்களது கருத்துகளும் பெறப்பட்டுள்ளன.

கிழக்கில் இவ்வருடம் இடமாற்றப்படவுள்ள இரண்டாம்தொகுதி 447 ஆசிரியர்களுள் 99வீதமானோர் தமக்குவழங்கப்பட்ட இடமாற்றத்தை மீளாய்வுசெய்யுமாறுகோரி

மேன்முறையீடு செய்துள்ளனர்.இது கவலைக்குரியது. அனைத்து ஆசிரியர்களும் தமக்கு சுகவீனம் தூரம் என்றுகூறி காரணம்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு கல்விஅபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுப்பது? பின்தங்கிய கல்குடா மட்டு.மேற்கு வலய மாணவர்களுக்குக் கற்பிப்பது யார்? அவர்களுக்கு கல்விகற்கும் உரிமையில்லையா?

மேன்முறையீடு செய்த பலர் திருமலைக்கு வந்து முறையிடுகின்றனர். அப்படி இங்குவந்துதான் முறையிடவேண்டுமென்பதில்லை. அப்பீல் சபையூடாக நேர்மையாக

நீதியாக மாணவர் கல்வி பாதிக்கப்படாவண்ணம் அதேவேளை ஆசிரியர் நலன்கருதி இடமாற்றம் இடம்பெறும். அதில் யாரும் சந்தேகப்படத்தேவையில்லை.

ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக இவ்வருடம் 760 ஆசிரியர்கள் இடமாற்றத்துக்குள்ளாகின்றனர். இவர்களுள் 313பேர் சேவைக் காலத்தைப் பூர்த்திசெய்து சுயவிருப்பத்தின்பேரில் விண்ணப்பித்து இடமாற்றம் பெறுபவர்கள்.

மீதி 447 ஆசிரியர்கள் கஸ்ட அதிகஸ்ட பிரதேசகடமையாற்றாதவர்கள் அல்லது எலவே அக்காலத்தை முற்றாக பூர்த்திசெய்யாதவர்களாவர். இந்த 447 பேரில் 99வீதமானோர் மேன்முறையீடு செய்துள்ளனர்.