மேன்முறையீட்டு முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள்

Report Print Abdulsalam Yaseem in கல்வி

மேன்முறையீட்டு முடிவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் நாளைய தினம் பழைய பாடசாலைகளில் கடமையாற்றலாம் என மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் தற்சமயம் நடைபெற்றுவரும் மாகாணமட்ட மேன்முறையீட்டு ஆசிரியர் இடமாற்றசபை அமர்வுகள் முடிந்து அதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும் வரை குறித்த ஆசிரியர்கள் அவரவர் பழைய பாடசாலைகளிலே கடமையாற்ற முடியுமென இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் தொடர்ச்சியாக 3 தினங்களாக இம் மேன்முறையீட்டு இடமாற்றசபை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகின்றது என்பதால் குறித்த மேன்முறையீட்டுக்கு விண்ணப்பித்த சகல ஆசிரியர்களும் இன்னும் முடிவு கிடைக்காதபடியினால் தாங்கள் ஏற்கனவே கடமையாற்றிய பழைய பாடசாலைக்குச் செல்வதா? அல்லது புதிய பாடசாலைக்குச் செல்வதா? என்று தெரியாமல் இருக்கின்றனர்.

இது குறித்து மாகாணக்கல்விப் பணிப்பாளரிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தற்போது நடைபெற்று வரும் மேன்முறையீட்டு இடமாற்றசபை இன்னும் ஒரு நாளிலே முடிவுறவுள்ளது. அதன் முடிவுகளை அதாவது மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்ற முடிவை மிகவிரைவாக அந்தந்த வலயக்கல்விப் பணிப்பாளர்களிடம் அறிவிப்போம்.

அதன்பின்னர் அந்தந்த பாடசாலை அதிபர் ஊடாக குறித்த ஆசிரியர்களுக்கு அறிவிப்பார்கள். அனைத்தும் இவ்வாரத்துக்குள் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கின்றேன்.

அதுவரையும் அவர்கள் தத்தம் பழைய பாடசாலைகளிலே கடமையை மேற்கொள்ளலாம். உண்மையில் இவ்வாறு 14 தினங்கள் கடமையாற்றலாம். எனினும் நாம் இந்தவார முடிவிற்குள் அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த முடிவைப்பார்த்து அந்தந்த வலயங்களில் நிலவும் ஆசிரியர் சமமின்மையை சீர்செய்ய உள்ளக ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்வதனுடாக சமப்படுத்தும் அதிகாரத்தை கிழக்குமாகாண கல்விச்செயலாளர் அந்தந்த வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers