தொண்டர் ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம்

Report Print Gokulan Gokulan in கல்வி

கிழக்கு மாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் அமைச்சர் கைச்சாத்திட்டார் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்திருந்தார்.

தொண்டராசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த மஹிந்த அரசால் நியமனம் வழங்காமல் ஏமாற்றப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்க கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்திருந்தார்.

அந்த வகையில் வடக்கு மாகாண தொண்டராசிரியர்களுக்கு அண்மையில் எமது அரசால் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

அதே போன்று கிழக்கு மாகாணத்தில் 445 தொண்டர் ஆசிரியர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்று உண்மையான தொண்டர் ஆசிரியர்களின் விபரங்களை நாம் மாகாண சபையிடம் கூறியிருந்தோம்.

எனினும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தொண்டராசிரியர்கள் தொடர்பாக உரிய விபரங்களை வழங்க தாமதித்ததால் கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களுக்கான நியமனம் தாமதமானது.

அதன் பின் நாம் கோரிய தகவல்களை திரட்ட கடந்த வருடம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் தொண்டராசியர்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தி அதில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் மத்திய கல்வி அமைச்சுக்கு மாகாண சபையால் அவர்கள் நடத்திய நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்படவர்களின் பட்டியலை அனுப்பாமல் வேறு ஒரு பட்டியலே அனுப்பப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்க்க நான் கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அமைச்சருடன் கலந்துரையாடியதுக்கு அமைவாக அன்று எடுக்கப்பட்ட முடிவின் படியே இன்று 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதத்கான அமைச்சரவை பத்திரத்தில் அமைச்சர் இன்று கைச்சாத்திட்டிருந்தார்.

இதன் போது அமைச்சர்களான வஜிர அபேவர்தன, ஹலீம், கல்வி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜெயமன்ன, மேலதிக செயலாளர் ஹேமந்த ,கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

விரைவில் மத்திய கல்வி அமைச்சில் இவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்படும்.

மேலும், இந்த தொண்டராசிரியர் விடயத்தில் சில அரசியல் வாதிகள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதும் இந்த இழுபறி நிலைக்கு காரணமாக இருந்தது.

இந்த அரசியல்வாதிகள் கடந்த மஹிந்த ராஜபக்சவின் அரசிலும் ஆளும் கட்சியிலேயே இருந்தனர். ஆனால் அன்று இந்த நியமனத்தை வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் இவர்களால் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் இன்று நான் கல்வி அமைச்சருடன் இணைந்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே தொண்டராசிரியர்கள் அவர்களின் கண்களுக்கு தென்பட்டுள்ளனர் என மேலும் தெரிவித்திருந்தார்.