ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருடன் விஷேட சந்திப்பு

Report Print Abdulsalam Yaseem in கல்வி

திருகோணமலை - சேருவில மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மார்ச் மாதம் நிவர்த்தி செய்யப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும், சேருவில மகாவித்தியாலயத்தின் பெற்றோர்களுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் 12 ஆசிரியர்கள் மாத்திரம் இருப்பதாகவும், மேலும் 8 ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவித்து நேற்று பெற்றோர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கந்தளாய் வலயக் கல்விப் பணியகம் இரண்டு ஆசிரியர்களை தற்காலிகமாக வழங்கியதால் ஆர்ப்பாட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கூடியிருந்ததுடன் பாடசாலைக்கு ஆசிரியர்களை உடனடியாக நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது எதிர்வரும் திங்கட்கிழமை நான்காம் ஆண்டுகளுக்குரிய ஆசிரியர் ஒருவரை உடனடியாக அனுப்புமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்.