சரிந்தது வடக்கு கிழக்கின் தமிழர் கல்விச் சாதனைகள்! எட்டு மாவட்டங்களின் நிலை என்ன?

Report Print Jeslin Jeslin in கல்வி

தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மிக மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.

முதல் பத்து இடங்களில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் எவரும் இடம்பிடிக்காத நிலையில், தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றனர்.

மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், சராசரி பெறுபேற்றை விட குறைந்தளவிலேயே வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களின் நிலையும் காணப்படுகிறது.

22,910 மாணவர்கள் தேர்வில் தோற்றிய அம்பாறை மாவட்டத்தில் இருந்து, 8163 மாணவர்களே உயர்தர வகுப்புக்குச் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, 17,126 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும், 6419 மாணவர்களே உயர்தர வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 14,291 மாணவர்கள், தேர்வில் தோற்றிய போதும், 4724 மாணவர்களே உயர்கல்விக்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

17,495 மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தேர்வில் தோற்றியிருந்த போதும், 6337 பேரே, உயர்வகுப்புக்குச் செல்லவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 4404 மாணவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். அவர்களில், 1434 பேர் உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து 3638 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும், 1321 மாணவர்களே உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெறவுள்ளனர்.

3494 மாணவர்கள் தேர்வில் தோற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தில், 1246 மாணவர்களே உயர்வகுப்புக்குச் செல்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் இருந்து 5143 மாவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். இவர்களில் 1129 பேர் மாத்திரமே உயர்கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கபொத சாதாரண தர தேர்வில் இம்முறை – நாடளாவிய ரீதியாக சராசரியாக 71.66 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 64.4 சதவீதமும், மட்டக்களப்பு மாவட்டத்தில், 62.51 சதவீதமும், திருகோணமலை மாவட்டத்தில், 53.17 சதவீதமும் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.02 சதவீதமும், கிளிநொச்சி மாவட்டத்தில் 54.3 சதவீதமும், மன்னார் மாவட்டத்தில் 69.34 சதவீதமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 60.4 சதவீதமும், வவுனியா மாவட்டத்தில் 68.28 சதவீதமும், மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட ரீதியான தேர்ச்சி வீத அடிப்படையில் 25 மாவட்டங்களிலும், கடைசி இடத்தை திருகோணமலை மாவட்டமும், அதற்கு முந்திய 24 ஆவது இடத்தை கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுள்ளன.

தேசிய அளவிலான சராசரி தேர்ச்சி வீதத்தை விட (71.66), அதிகமான தேர்ச்சி வீதத்தை ஏனைய பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்கள் கொண்டிருக்கின்ற போதும், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களும் சராசரி நிலையை விடக் கீழேயே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...