மன்னார் மாவட்ட பாடசாலைகள் புத்தளத்தில் இயங்குகின்றமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Report Print Theesan in கல்வி

மன்னார் மாவட்டத்திற்குரிய பல பாடசாலைகள் தற்போதும் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருவது தொடர்பில் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும்,

மன்னர் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் இன்றும் புத்தளம் மாவட்டத்திலே இயங்கி வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆசிரியர்களுக்குரிய சம்பளமும் அங்கு அனுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.

1990ஆம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்ததனால் அம்மாணவர்கள் அங்கு கல்வி கற்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

நாட்டில் சுமூகமான சூழ்நிலைகள் ஏற்பட்ட பின்னரும் அந்த பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து கல்வியை கற்று உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இந்த நிலையில் புத்தளத்தில் கற்கும் மாணவர்கள் பல வசதிகளுடன் கற்றலை மேற்கொண்டு மன்னார் மாவட்ட உயர் தர பரீட்சைக்கு தோற்றுகின்ற நிலையில் அவர்களும் மன்னார் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியிலேயே கணக்கெடுக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக மன்னாரிலேயே இருந்து மன்னாரிலேயே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் தட்டிப் பறிக்கப்படுகின்றமையினால் கடுமையான பாதிப்புக்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

புத்தளத்தில் இயங்குகின்ற பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்தினுள்ளேயே பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் குறித்த பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள தமது சொந்த இடங்களில் இயங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒரு தீர்மானம் வட மாகாணசபையால் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இதன் மூலம் மன்னார் மாவட்டத்தில் உயர்கல்வி கற்கின்ற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றமையும், மன்னார் மாவட்ட மாணவர்களின் வளங்கள் புத்தளம் மாவட்டத்தினால் பயன்படுத்தப்படுகின்றமையும், மன்னார் மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே இதை நீங்கள் உடனடியாக கவனத்தில் கொண்டு குறித்த பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தினுள் பதிவு செய்யுமாறும் இல்லையெனில் அப்பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.