கல்வியற் கல்லூரிகளுக்கு இம்முறை ஒரேதடவையில் 8 ஆயிரம் பேர்

Report Print Ajith Ajith in கல்வி

இலங்கையிலுள்ள 19 தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு இம்முறை ஒரே தடவையில் 8 ஆயிரம் பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான நேர்முகத் தேர்வு ஜுன் மாதம் மூன்றாம் வாரத்திலிருந்து நடைபெறும் என கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, தேசிய கல்வியற் கல்லூரிகளில் , தேசிய கல்வி போதனா டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்காக இம்முறை ஒரே தடவையில் இரண்டு குழுக்களை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2012, 2013 ஆம் ஆண்டுகளில் கல்வியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை இணைத்துக் கொள்வதில் ஏற்பட்ட தாமதத்தால் நிர்வாக மட்டத்தில் பல்வேறு சர்ச்சைகள் உருவெடுத்தன. இவற்றுக்கு முடிவு கட்டும் வகையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 27 பாடநெறிகளுக்காக 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 4 ஆயிரம் பேரும் , 2017 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 4 ஆயிரம் பேருமாக மொத்தம் மொத்தம் 8 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2019 ஜூன் மாதம் முதல் வாரத்தில் நேர்முக பரீட்சைக்கு தோற்றுவதற்கான அழைப்பு கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மூன்றாம் வாரம் முதல் கல்வியற் கல்லூரிகள் மட்டத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.’’ என்று

குறிப்பிடப்பட்டுள்ளது.