சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் மாணவர்களின் செயலால் மகிழ்ச்சியில் தாயக மாணவர்கள்

Report Print Dias Dias in கல்வி

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் உள்ள தமிழ் மன்றம் வடக்கு - கிழக்கு மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் முகமாக இரண்டாவது முறையாக தாயகத்திலுள்ள பாடசாலையில் நவீன கற்றல் அறையை (smart class room) உருவாக்கியுள்ளது.

முதல் முறையாக இந்த திட்டம் கிளிநொச்சி மாயவனூர் பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மட்டக்களப்பு - கல்குடா, மாங்கேணி தமிழ் கலவன் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் உள்ள தமிழ் மன்றம், தாயக பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்காக நல்லெண்ண அடிப்படையில் இந்த திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.

மட்டக்களப்பு - கல்குடா, மாங்கேணி தமிழ் கலவன் பாடசாலை யுத்தம் மற்றும் சுனாமியால் பல்வேறு தாக்கங்களுக்கு இலக்காகியுள்ளன. இதனால் இந்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் கல்வி நிலையில் அடிமட்டத்தில் உள்ளனர்.

இவ்வாறான மாணவர்களது திறமைகளை மேம்படுத்தும் நோக்கிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தும் விதத்திலும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை மாங்கேணி தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட நவீன கற்றல் அறையானது திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், தவிசாளர் கோணலிங்கம், பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், இன்றுள்ள சூழலில் புலம்பெயர்ந்திருக்கும் மாணவர்கள் இப்படியாக சிந்திப்பது உண்மையில் மனதிற்கு ஆறுதலை அளிக்கின்றது.

அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கு ஏற்றாற் போல் உங்கள் செயற்பாடுகளும் அமைய வேண்டும். சுவிட்ஸர்லாந்தின், லுட்சன் மாநிலத்தில் இருக்கும் தமிழ் மன்றத்தின் தமிழ் கல்வி சார் சேவை உண்மையில் பாராட்டுவதற்கும், போற்றுவதற்கும் உரியது என தெரிவித்துள்ளார்.

இதன்போது 45இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.