வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

Report Print Thileepan Thileepan in கல்வி

டெங்கு நோய் தாக்கம் காரணமாக வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்குவதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தால் கடந்த ஏழாம் திகதி தொடக்கம் விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. 550 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனியார் கல்லூரி உரிமையாளருக்கான சந்திப்பு இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் வவுனியா நகரசபை உப தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்தியர்கள், நகரசபை ஊழியர்கள், தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தனியார் கல்லூரி உரிமையாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெங்கின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதுடன் தனியார் கல்லூரிகளை மூடியதன் காரணமும் விபரமாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின் தனியார் கல்லூரி உரிமையாளர்களும் அவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தெரிவித்தனர். சுமார் இரு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை இயங்குவதற்குக்கான தடையுத்தரவினை மேலும் ஒருவாரத்துக்கு நீடிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.