கொரோனா கெடுபிடிக்குள் ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சை நடாத்துவது நியாயமா...?

Report Print V.T.Sahadevarajah in கல்வி

இலங்கைப்பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் க.பொ.த.உயர்தரப் பரீட்சையை வழமைபோன்று நடாத்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடம் பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பித்துள்ள நிலையில் இப்பரீட்சை நடாத்தப்படுவது நியாயமா இல்லையா என்பது தொடர்பில் பலவித கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

இந்தநிலையில் ஒன்றில் பரீட்சை பிற்போடப்படவேண்டும் அல்லது பூர்த்திசெய்யப்பட்ட பாடப் பரப்பிற்குள் வினாப்பத்திரங்களைத் தயாரித்து பரீட்சையை நடாத்தவேண்டும்.

இந்த இரண்டில் எதை பரீட்சைத்திணைக்களம் செய்யும் என்பது இன்னும் பரீட்சார்த்திகளுக்கோ பெற்றோர்களுக்கோ தெரியாதுள்ளது.

இந்நிலையில் இக்கட்டுரை அதனை ஆராய்வதாக உள்ளது.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்திவரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சா.தரம், க.பொ.த.உயர்தரப் பரீட்சை போன்ற பொதுப் பரீட்சைகள் மிகவும் நம்பகமாகவும் தரமானதாகவும் நடைபெற்றுவருவதை அனைவருமறிவோம்.

இந்தநிலையில் சமகால கொரோனா நெருக்கடி நிலையிலிருந்து நாடு இன்னமும் முற்றாக விடுபடவில்லை. பாடசாலைகளைப் பொறுத்தவரை இவ்வருடத்தில் மாணவர்கள் கற்றல் நிலைமைகளிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறார்கள்.

எவ்வளவுதான் நிகழ்நிலை Online ,தொலைக்காட்சி கல்விச்சேவை என்று நடாத்தப்பட்டாலும் அவையனைத்தும் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா? என ஆராயும்போது விடை கேள்விக்குறியதாகின்றது.

கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற க.பொ.த. சா.தர பரீட்சைக்கான முடிவுகளை இந்தாண்டு கொரோனா பீதிக்கும் எத்தனையோ வசதியீனங்களுக்கும் மத்தியில் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுவைத்தமை பாராட்டுக்குரியது.

ஆணையாளர் நாயகம் சனத்பூஜித மற்றும் அவரது குழாத்தினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.

பரீட்சை தொடர்பில் பல்வேறு நியமங்கள் கருத்திற்கொள்ளப்பட்டாலும் குறித்த பரீட்சைக்கான பாடவிதானம் வகுப்பறையில் கற்பிக்கப்பட்டுள்ளதா? பரீட்சைக்கு மாணவர் தயாரா? அல்லது இவற்றுக்கு போதுமான காலம் இருக்கிறதா? இயல்பான சூழலில் பரீட்சை நடைபெறுமா? என்பதெல்லாம் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவை.

சரி இவ்வருடத்தில் அடுத்ததாக இடம்பெறவிருக்கும் பொதுப் பரீட்சைகளாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப்பரீட்சை இருக்கப்போகின்றது.

தரம் 5 புலமைப்பரீசில் பரீட்சையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலத்துள் கற்பிக்கப்பட்ட பாடப் பரப்பிற்குள் வினா அமையுமென தெரிவிக்கப்பட்டிருப்து ஓரளவு திருப்தியாகவுள்ளது.

எனினும் வாழ்க்கையில் முக்கிய பரீட்சையாக திகழும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாப் பத்திரங்கள் பற்றி இன்னும் தீர்க்கமாக முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

உயர்தரப் பாடங்களில் பொதுவாக 12 அலகுகள் காணப்பட்டால் இறுதி 3 அலகுகள் இன்று பாடசாலைகளிலோ தனியார் நிலையங்களிலோ கற்பிக்கப்படாத சூழ்நிலைமைகளே காணப்படுகின்றன. அதற்கான காரணம் யாவரும் அறிந்ததே.

முழுப்பாட அலகுகளையும் கற்காத ஒரு மாணவனிடம் முழுப்பாட அலகுகளுக்கான வினாக்களை உள்ளடக்கிய வினாப்பத்திரங்களை பரீட்சைக்கு வழங்குவது நியாயமாகுமா? பரீட்சை நியமமாகுமா? அரைகுறை பாடப் பரப்புடன் நடாத்தப்படும் ஒரு பரீட்சை பூரண பரீட்சையாகுமா? அத்துடன் அது பொதுப் பரீட்சையாகுமா? என்பது கேள்விக்குறி.

இதுதொடர்பாக மாணவர்பால் அக்கறையுள்ள ஒரு ஆசிரியர்தொழிற்சங்கம் இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

மறுபக்கம் முதல் 8 அலகுகளுக்கான வினாப் பத்திரங்களை மாத்திரம் உள்ளடக்கிய வினாப் பத்திரத்தை வழங்கி பரீட்சையை நடாத்த முற்படலாம்.

இது அதற்குப் பிந்திய பல்கலைக்கழக அல்லது மேற்படிப்பிற்கு தடையாக அமையாதா? அதாவது இறுதி அலகுகளை அறவே கற்காத அவனால் மேற்படிப்பை இலகுவாகத் தொடர்வதில் சங்கடங்கள் இல்லாமலிருக்குமா?

அண்மையில் இப்பரீட்சை நடாத்துவது தொடர்பில் கல்வியமைச்சில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மாணவர்க்கு போதுமான தெரிவுகளை அதாவது choice களை வழங்கி வினாப் பத்திரங்களை வழங்கலாம் என கூறப்பட்டதாம்.

உண்மையில் இந்த சொய்ஸ் என்பது கட்டுரை வகை வினாக்களுக்கே பொருந்தும். மாறாக பல்தேர்வு வினாக்களை உள்ளடக்கிய முதல் பத்திரத்திற்குப் பொருந்தாது.

தற்போதும் இப்பரீட்சை தொடர்பில் பல உயர் மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்பதை ஊடகங்கள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் இந்தமுறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர்கள் ஒரு புறம் பூரணமாக பாடத் திட்டத்தை கலைத்திட்டத்தை அதாவது பாடப்பரப்பை பூர்த்தி செய்யவில்லை. மறுபுறம் படித்த பாடத்தையாவது மீட்டல் செய்வதற்கோ பயிற்சி செய்வதற்கோ போதிய உளவியல் கள நிலவரம் இல்லை.

*தயார்நிலை Readiness என்பது கல்வி உளவியல்பரப்பில் பேசப்படும் சொற்பதமாகும். ஒரு மனிதனுக்கு எதற்கும் தயார்நிலை வேண்டும். அதேபோல ஒரு மாணவன் கற்பதற்கும்பரீட்சை எழுதுவதற்கும் தயார்நிலை வேண்டும்.*

இன்றைய கொரோனாக் காலகட்டத்தில் இத் தயார்நிலை என்பது எத்தகையதாகவிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். அவர்கள் நிம்மதியாகவிருந்து கற்கும் சூழ்நிலை உள்ளதா?

எதை எடுத்தாலும் கொரோனா ஊரடங்கு பயம் பீதி உணவுக்கு அல்லாடும் நிலை இப்படிப் பல.

இந்தநிலையில் அவர்களால் இயல்பாக வழமை போன்று கற்க முடியுமா? மறுபுறம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற இப்பரீட்சையை ஒட்டுமொத்தமாக முழுவீச்சுடன் முழுமையாக நடாத்தமுடியுமா? என்பது கேள்விக்குறி.

இதேவேளை அடுத்த ஆகஸ்ட்டில் உயர்தரப் பரீட்சையைச்சந்திக்கப்போகும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் அல்லது இந்த 7 மாத காலம் இழந்த கற்றல்அலகுகளை துரிதமாக பூர்த்திசெய்யக்கூடிய நடவடிக்கைகளும் கல்வியமைச்சால் மேற்கொள்ளப்படவேண்டும்.

எதிர்வரும் ஆகஸ்ட்டில் நடாத்த உத்தேசிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தரப்பரீட்சையை பிற்போடுவது அனுகூலமாகவிருக்கும் என கல்வியியலாளர்களும் பெற்றோர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

எனவே பரீட்சைத்திணைக்களம் மாணவர் மையமாகச் சிந்தித்து நியாயமாகச்செயற்படவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.