பிரதான பொறியியல் பீடங்கள் 6 இற்கு இணைக்கப்படவுள்ள மேலும் 405 மாணவர்கள்

Report Print Rakesh in கல்வி
141Shares

நாட்டின் பிரதான 6 பொறியியல் பீடங்களுக்கு, மேலும் 405 மாணவர்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வோட் பிளேஸில் உள்ள உயர்கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது இலங்கையில் பொறியியல் பீடங்களைக் கொண்ட பேராதெனிய, ஶ்ரீ ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், ருஹுணு, மொரட்டுவை, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் இந்த 405 மாணவர்களும் இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அமைச்சர் என்ற வகையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் எனக்கோ, எமது அரசுக்கோ இல்லை. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள, சுபீட்சத்தின் நோக்குப் பிரகடனத்துக்கு அமையவே செயற்பட விரும்புகிறோம்.

அதன் இலக்குகளை அடைவதே எமது நோக்கம். குறிப்பாக பல்கலைக்கழக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு என்பவற்றுக்கு இடையில் காணப்படும், தற்போது நிலவும் பொருந்தாத தன்மைக்கு தீர்வு காண வேண்டும்.

இந்த நோக்கத்துக்காக தொழில் சார்ந்த பாடநெறியான பொறியியலில் இவ்வருடம் மேலும் 405 மாணவர்களைச் சேர்ப்பதன் மூலம் நாம் முன்னோக்கி ஒரு காலடியை வைக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார மற்றும் அந்தந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பீடாதிபதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.