கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்ட பரீட்சையை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் ஒருவாரத்திற்குள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இவ்வாறு குறிப்பிடார்.
இதேவேளை, சாதாரண தர மாணவர்களுக்காக இம்முறை தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் தொடர்பில் கேட்டறிவதற்காக ஆசியர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த வார இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், அனைத்து க.பொ.த சாதாரண தர ஆசிரியர்களும் info.moe.gov.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையம் மற்றும் வழமையான நடைமுறையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் தொடர்பில் வெவ்வேறாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்கூறிய இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்க முடியாத ஆசிரியர்கள், தமது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடசாலை – மாகாண மற்றும் வலயக் கல்வி பணிமனையின் தொடர்பிலக்கம் என்பவற்றை grade11@moe.gov.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதனூடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.