சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையக்கூடாது

Report Print Samy in தேர்தல்

தேர்தல் முறை மாற்றத்தில் சிறிய கட்சிகள் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் போது தேர்தல் முறைமையினையும் மாற்றியமைப்பதற்கான ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான எல்லை நிர்ணயப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. எல்லை நிர்ணயக்குழுவின் பணிகள் எதிர்வரும் 15ம் திகதியுடன் நிறைவு பெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எல்லை நிர்ணயப் பணிகள் பூரணப்படுத்தப்படாமையினால் உள்ளூராட்சித் தேர்தலையும் நடத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

தற்போதைக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் எல்லை நிர்ணயப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த போதிலும் மாவட்ட செயலாளர் மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

கண்டி மாவட்டத்தில் தற்போது 40 சதவீதமான பணிகளே நிறைவு பெற்றுள்ளன. இந்த எல்லை நிர்ணயக்குழுவினரின் அறிக்கை பாராளுமன்ற அனுமதியை பெற்றதன் பின்னரே தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.

எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்யாமல் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் எமக்கில்லை. அத்துடன் தேர்தல் பிற்போடப்படுவதற்கான அரசியல் காரணங்களை என்னால் கூற முடியாது என்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்த நிலையில் தேர்தல் முறை மாற்றத்தின் போது சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் குறைவடையும் நிலை காணப்படுவதனால் அதனை தடுக்கும் வகையில் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

புதிய தேர்தல் முறை உருவாக்கம் தொடர்பில் பெரிய கட்சிகளுக்கும் சிறிய கட்சிகளுக்குமிடையே முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல்கள் குழுவில் ஆராயப்பட்டு வரும் நிலையில் பெரிய மற்றும் சிறிய கட்சிகளிடையே இவ்விடயத்தில் தீவிர முரண்பாடு உருவாகியுள்ளது.

பெரிய கட்சிகளுக்கு சார்பாக இதனை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடத்தே இந்த நிலைமை உருவாகியுள்ளது.

இன்றுள்ள 160 தேர்தல் தொகுதிகளை 140 ஆக குறைத்து விகிதாசார ஆசனங்கள் என 93 ஆசனங்களை வழங்கி வெற்றி பெறும் கட்சிகளுக்கான ஸ்திரத்தன்மை போனஸ் என்றும் வேறு தேவைகளுக்கான போனஸ் என்றும் 7 மேலதிக ஆசனங்களை ஒதுக்கி மொத்த பாராளுமன்ற உறுப்பினர் தொகையை 240 ஆக அமைக்கும் புதிய தேர்தல் முறையை ஏற்றுக்கொள்ளும்படியும் பல் அங்கத்துவ தொகுதிகளை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை கட்சிகள் மீது அழுத்தம் செலுத்தி வருகின்றன என்று அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கட்சியின் ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஒப்பீட்டளவில் தென்னிலங்கை சிறுபான்மை கட்சிகள் எதிர்நோக்கும் அளவில் சவால்களை எதிர்கொள்ளாத தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல் குழுவில் இன்னமும் அதிகமாக சகோதர சிறுபான்மை கட்சிகளுக்கு சார்பான நிலைப்பாடுகளை முன்வைக்கவேண்டும்.

வழிகாட்டல் குழுவில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான இரா. சம்பந்தனும் எம்.ஏ. சுமந்திரனும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

அரசியலமைப்புப் பேரவையில் புதிய கலப்புத் தேர்தல் முறை சம்பந்தமான விவாதங்கள் காரசாரமான கட்டத்தை அடைந்துள்ளன. தேர்தல் தொகுதிகளுக்குள் விகிதாசார ஆசனங்களுக்குமிடையேயான விகிதாசாரம் 60- – 40 என்ற அடிப்படையில் அமையவேண்டுமென பேசப்படுகின்றது.

ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு இரண்டு மாகாண சபைத் தொகுதிகள் அமையவேண்டுமென்ற கருத்தும் இங்கு பேசப்படுகின்றது. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறைமை மட்டுமல்ல எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் முறையும் தீர்மானிக்கப்படவுள்ளது.

தென்னிலங்கையின் மூன்று கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் முற்போக்கு முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பில் பெரும்பான்மை கட்சிகளுடன் மோதவேண்டிய கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.

ஜே.வி.பி., ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளன. குறிப்பாக 160 தேர்தல் தொகுதிகளை 140 ஆக குறைக்கும் போது இன்று இருக்கும் சிறிய தொகுதிகள் ஒன்றிணைக்கப்படும். இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான பிரத்தியேக தேர்தல் தொகுதிகளை உருவாக்கிக் கொள்வதில் நாம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம் என்றும் மனோ கணேசன் விளக்கமளித்திருக்கின்றார்.

உண்மையிலேயே கலப்பு முறையிலான தேர்தல் முறை மாற்றத்தி னால் வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் சாத்தியமே காணப்படுகின்றது. இவ்வாறு சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறையவிடாத வகையில் பல பிரதிநிதித்துவ தொகுதிகளை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

தற்போது தேர்தல் முறை மாற்றம் குறித்து அரசியலமைப்புப் பேரவையில் வழிகாட்டல் குழுவில் ஆராயப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவம் குறையாத விதத்தில் தேர்தல் முறை மாற்றத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கையை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் அழைப்பின் பேரில் கடந்த திங்கட்கிழமை இரவு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முத்தரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கின்றனர். இதன்போது புதிய தேர்தல் முறை மாற்றத்தில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்றும் அதற்கு ஏற்றவகையில் தேர்தல் முறையினை மாற்றியமைப்பதற்கு ஒன்றுபட்டு செயற்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

தற்போதைய நிலையில் கலப்பு தேர்தல் முறைமை அமுல்படுத்தப்படுமானால் அதன் மூலம் வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பெரிதும் பாதிக்கப்படும். இந்த நிலையில் அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல் குழுவில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இதற்கு எதிராக செயற்பட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க நடவடிக்கையேயாகும்.

தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கிலும் பாராளுமன்றப் பிரதி நிதித்துவம் குறைவடைந்தே உள்ளது. யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து பெருமளவான மக்கள் புலம்பெயர்ந்துள்ளமையே இதற்கான காரணமாக அமைந்திருக்கின்றது.

யாழ். மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 7 ஆக குறைவடைந்திருக்கின்றது. இந்த நிலையில் தேர்தல் முறை மாற்றத்தின் போது வடக்கு, கிழக்கில் முன்னர் இருந்ததைப் போன்ற பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.

மொத்தத்தில் தேர்தல் முறை மாற்றத்தின் போது எந்தவகையிலும் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவம் குறையாதவகையில் பார்த்துக்கொள்ள வேண்டியது சகல சிறுபான்மை கட்சிகளினதும் பொறுப்பாகும்.

எனவே, இந்த விடயத்தில் அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒன்று பட்டு செயற்பட்டு வெற்றிபெற வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

Latest Offers

loading...

Comments