சமூக நோக்குடையவர்களையே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும்

Report Print Nesan Nesan in தேர்தல்

அனுபவமும், திறமையும், சமூக நோக்கும் உடையவர்களையே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்டுப்பணம் செலுத்துவதும் நடந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் அம்பாறை காரைதீவிலும் அதற்கான அனைத்து வேலைப்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த முறை வழமைக்கு மாறாக காரைதீவில் எந்த அரசியல் கட்சிக்கும் சார்பில்லாமல் சுயேட்சையாக போட்டி இடுவது என முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவையும் தெரிவு செய்திருக்கும் இந்த தருணத்தில் அந்த குழுவின் செயற்பாடுகளானது ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றாக அமையாதது மிகுந்த கவலையை தருகின்றது.

இங்கு தேர்தலுக்காக தெரிவு செய்யப்படுபவர்கள் எந்தவிதமான அனுபவமும், திறமையும், தூரநோக்கும் இல்லாதவர்களை தெரிவு செய்து எதிர்வரும் தேர்லில் களமிறக்குவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த விடயத்தில் எமது அமைப்பானது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றது.

காரைதீவு மக்கள் எப்போதும் எவருக்கும் சோடை போகாதவர்கள் அவ்வாறான மக்களை வழிப்படுத்த வேண்டிய கடப்பாடு இங்குள்ள அனைவருக்கும் உள்ளது. அந்தவகையிலே தான் இங்கு தேர்தலுக்காக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.

அரசியல் களத்திலும், தேர்தல் களத்திலும், அனுபவ ரீதியிலும் களங்கண்ட எத்தனையோ திறமை மிக்கவர்கள் இந்தக் கிராமத்தில் இருக்கும் போது வெறுமனே எந்தவிதமான திறமையும் இல்லாதவர்களை பிரதேசசபைக்கு அனுப்பி விட்டு எதனை சாதிக்க முடியும்.

மேலும், இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்க்கமான முடிவினை எடுத்து காரைதீவின் ஒற்றுமையினையும், பெருமையினையும், தொன்மையினையும் உலகறியச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார்.